விவசாயத்திற்கு வன இலாகா அதிகாரிகள் தடை: வட்டமடுவில் ஹர்த்தால்

அம்பாறை – அக்கரைப்பற்று, வட்டமடு பகுதியில் விவசாய செய்கை மேற்கொள்ள வன இலாகா அதிகாரிகள் தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.வட்டமடு விவசாய அமைப்புகளின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று பகுதியில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.இதன் காரணமாக அக்கரைப்பற்றில் சந்தை, வர்த்தக நிலையங்களும் பெரும்பாலான அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டிருந்ததாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியினை மறித்து வட்டமடு விவசாயிகளினால் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.இதன் போது அக்கரைப்பற்று – கல்முனை ஊடான போக்குவரத்து சுமார் இரண்டு மணி நேரம் தடைப்பட்டிருந்தது.இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த அக்கரைப்பற்று பொலிஸார் இந்த விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக வழங்கிய வாக்குறுதியினை அடுத்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் .இதேவேளை, இன்று காலை ஹர்த்தால் தொடர்பில் இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தின் போது ஒருவர் கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளார்.சம்பவத்தில் காயமடைந்த நபர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வட்டமடு பகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக விவசாய செய்கை இடம்பெற்ற நிலையில், யுத்தம் காரணமாக விவசாயம் மேற்கொள்ளப்படாமல் தடைப்பட்டிருந்தது.எனினும், யுத்தத்தின் பின்னர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள விவசாயிகள் தயாரான போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது.வட்டமடு பகுதியில் உள்ள 1540 ஏக்கரில் விவசாய செய்கையில் ஈடுபடுவதற்கு வனவள திணைக்களத்தினால் கடந்த வருடம் தடை விதிக்கப்பட்டிருந்தது.எனினும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை.

You might also like