பாலி எரிமலை: எச்சரிக்கையை மீறி வெளியேறாத மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படலாம்

இந்தோனீசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலையின் சீற்றம் தீவிரமடைந்துள்ளதையடுத்து, இன்னும் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறாத மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படலாம் என இந்தோனீசிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகும் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கிருந்து வெளியேறவில்லை. எரிமலைக்கு தொலைவில் உள்ள பாதுகாப்பான இடங்களில் சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால், மற்றவர்கள் தங்களது கால்நடைகளை விட்டுவர விரும்பவில்லை.
இரண்டாம் நாளாக பாலி விமானநிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பகுதியான இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனர். ரத்து செய்யப்பட்ட 445 விமானங்களால் 59 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சாம்பல் விழுந்துள்ள பகுதிகளில், அதிகாரிகள் முகமுடிகளை விநியோகம் செய்து வருகின்றனர். மேலும், மலையை சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
எரியும் பாறைகளின் தீக்குழம்பு மலையில் மேலிருந்து கீழே பாய்ந்து வருவது காணப்பட்டது. இதனால் இதனை சுற்றுயுள்ள பகுதியில் வசிக்கும் ஒரு லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால், திங்கட்கிழமையன்று 40,000 பேர் மட்டுமே வெளியேறினர்.
மலை உச்சியின் மேலிருந்து 3,400 மீட்டர் வரை கரும்புகை சூழ்ந்துள்ளது.
எரிமலையில் இருந்து தொடர்ந்து சாம்பல் துகள்கள் வெளிப்படுவதை காண முடிகிறது. வெடிப்பின் சத்தம், மலை உச்சியிலிருந்து 12 கிலோ மீட்டர் வரை கேட்கப்படுகிறது
தண்ணீரோடு கலந்துள்ள குளிர்ந்த தீக் குழம்புகளை எரிமலைக்கு அருகில் உள்ள வயல்கள் மற்றும் ஆறுகளில் காண முடிகிறதுகனமழை காரணமாக இந்த குளிர்ந்த தீக்குழம்புகள் அதிகரிக்கக்கூடும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பிரதிநிதி சுடோபோ பூர்வோ நூக்ரோஹோ எச்சரித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதமே எரிமலை வெடிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், மக்களை கூட்டமாக வெளியேற்றினர். எச்சரிக்கை நிலை குறைந்ததையடுத்து அக்டோபரில் மக்கள் வீடு திரும்பினர்.

You might also like