பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும்

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு ஆளுநர் பதில் சொல்லியாக வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண பட்டதாரிகள் நியமனத்தின் போது அநீதியிழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பட்டதாரிகள் முன்னாள் முதலமைச்சரை தொடர்பு கொண்டு இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் நேற்று வழங்கப்பட்ட நியமனங்களின் போது 1,119 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் நியாயமாக 1,441 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

100 நாட்களுக்கும் மேலாக மழையிலும், வெயிலிலும் போராடிய எமது பிள்ளைகளை மனதில் வைத்து ஜனாதிபதி பிரதமர், கல்வியமைச்சர் மற்றும் அதிகாரிகள் என பல இடங்களிலும் போராடி நாம் பெற்றது மீண்டும் பட்டதாரிகள் வீதியில் இறங்கி போராட கூடாது என்பதற்காகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஏனைய 322 பட்டதாரிகளுக்கான நியமனங்களையும் ஆளுநர் அதே மேடையில் வழங்கி இருக்க வேண்டும். அவ்வாறு இடம்பெறாததன் மூலம் ஏற்கனவே மன வேதனைகளுக்கு உள்ளாகியுள்ள பட்டதாரிகள் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டி ஏற்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அது மாத்திரமன்றி ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்பட வேண்டும்.

அவர்கள் தமது தகுதியை நிரூபித்துள்ளார்கள் என்பதை நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும். மாகாணசபை இருந்திருந்தால் இன்றும் நாம் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் தொடர்பில் தீர்மானங்களை எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தியிருப்போம்.

ஆகவே தற்போது அதிகாரமுள்ள சபையாக நாடாளுமன்றமே உள்ளது. ஆகவே எமது பட்டதாரிகளின் உரிமைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்ப வேண்டும்.

அத்துடன் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை பெற்றுக் கொடுப்பது என்பது ஆளுநருக்கு கடினமான விடயமல்ல.

ஏனெனில் நாம் ஏற்கனவே மாகாணத்தின் வெற்றிடங்கள் தொடர்பான தரவுகளை தேசிய முகாமைத்துவ திணைக்களத்திற்கு வழங்கிய போது எமது வெற்றிடங்களை நிரப்ப முழு ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக அவர்கள் உறுதியளித்துள்ளார்கள்.

எனவே ஆளுநர் ஜனாதிபதியுடன் கதைத்து குறித்த வெற்றிடங்களுக்கான நிதியைப் பெற்று பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like