போக்குவரத்து சபை ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்

வடக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த கோரிக்கையில்,

வடக்கில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ள போராட்டத்தால் பல தரப்பினரும் பெரும் அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ளனர்.

அதிலும் பாடசாலை மாணவர்களும், அதிபர், ஆசிரியர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் மூன்றாம் தவணைப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்நாளில் ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டம் மாணவர்களின் கல்வியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

இதன்காரணமாக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று போக்குவரத்து சேவையை உடன் ஆரம்பிக்க வழியேற்படுத்த வேண்டும்.

ஊழியர்களின் போராட்டம் தொடருமாக இருந்தால் அதிபர்கள், ஆசிரியர்களும் அவர்களுக்குத் துணையாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதோடு பாடசாலைகள் அனைத்தும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும்.

வடமாகாணத்தில் அனேகமான மாணவர்கள் பருவகாலச் சீட்டுகளுடன் இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்துகளில் பயணம் செய்வதோடு, தூர இடங்களில் பணியாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் பலர் இத்தகைய பேருந்து சேவையை பெரிதும் பயன்படுத்துகின்றனர்.

பேருந்து சேவை தடைப்படுவதால் கடமைக்கு செல்வது முடியாத காரியமாக உள்ளது, ஆகையால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மாணவர்களின் நலனில் அக்கறைக்கொண்டு உடனடியாக போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like