யாழில் உயிர் பிரியும் நேரத்திலும் பலரது உயிர்களை காப்பாற்றிய சாரதி

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி வடக்கு பகுதியில் சாரதி ஒருவர் தனது உயிர் பிரியும் நேரத்திலும் பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளார்.இந்தச் சம்பவம் சாவகச்சேரி வடக்கில் நேற்று இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில் தெரியவருவதாவது,திருமண மண்டபத்துக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸின் சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதன்போது வீதியோரம் வாகனத்தைப் பாதுகாப்பாக நிறுத்திய பின்னரே அவர் உயிரிழந்தார்.

வடமராட்சி வதிரி ஸ்ரீபரமானந்தா சிறுவர் முதியோர் பராமரிப்பு நிலைய பஸ்ஸின் சாரதியான குமாரசாமி நவரத்தினம் (வயது – 69) என்பவரே உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி நகரசபை பொன் விழா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்விற்காக வடமராட்சியில் இருந்து பெண் வீட்டார் பஸ்ஸில் சென்றுள்ளனர்.இதன்போது பஸ்ஸை செலுத்தி வந்த நவரத்தினத்திற்குத் திடீரென கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

தாங்க முடியாத வலியுடனும், வாகனம் விபத்தில் சிக்கிவிடக்கூடாது என்ற கவனத்துடனும் பஸ்ஸை வீதியோரமாக பாதுகாப்பாக நிறுத்த அவர் முயன்றுள்ளார்.இதில், வீதியோரத்தின் நீர்க்குழாய் புதைப்பதற்காகத் தோண்டப்பட்ட குழியில் பஸ்ஸின் சில்லு புதைந்தது. அதற்கு மேல் பஸ் நகர முடியாத நிலையில் சாரதி பஸ்ஸில் சாய்ந்தவாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அறிக்கையைப் பார்வையிட்ட பதில் நீதிவான் ப.குகனேஸ்வரன் வைத்தியசாலையின் சவச்சாலைக்குச் சென்று சடலத்தை நேரில் பார்வையிட்டு விசாரணைகளை நடத்தினார்.

You might also like