வெட்டுக் காயங்களுடன் சடலம் மீட்பு: நான்காவது சந்தேகநபருக்கு விளக்கமறியல்

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற கொலை சம்பவமொன்றின் நான்காவது சந்தேகநபரை இம்மாதம் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நான்காவது சந்தேகநபராக கண்டலடியூற்று, ஜித்தா நகர் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிண்ணியா கங்கை பாலத்துக்கு அருகிலுள்ள வீடொன்றுக்கு முன்னால் இருந்து வெட்டுக் காயங்களுடன் சடலமொன்று கடந்த 23ஆம் திகதி பொலிஸாரினால் மீட்கப்பட்டது.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்ற அடிப்படையில் மூவர் விளக்கமறியலில் இருந்து வருகின்ற நிலையில் கொலை செய்யப்பட்டவருடன் தொலைபேசியில் உரையாடியவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபர் கடந்த 29ஆம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like