யாழில். பயணிகள் பேருந்தை களவாடிச் சென்ற திருடன்!

யாழ்ப்பாணம் – மன்னாருக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பேருந்தை நபர் ஒருவர் களவாடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

“யாழ்ப்பாணம் – மன்னாருக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து நேற்றைய தினம் வழமை போன்று சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில், யாழ்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி வந்திருந்தது.

இந்நிலையில், பயணிகளை இறக்கி விட்டு, நகரை அண்மித்த பகுதியில் பேருந்தை நிறுத்தி விட்டு சாரதியும், நடத்துனரும் உணவருந்த சென்று விட்டனர்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட யாழ்.பொம்மை வெளி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேருந்தை திறப்பு இன்றி இயக்கி, அதனை களவாடிச் சென்றுளார்.

எனினும், குறித்து பேருந்தை சிறிது தூரம் ஓட்டிச் சென்ற போது பேருந்து சகதிக்குள் சிக்கிக்கொண்ட நிலையில், தொடர்ந்து செல்ல முடியாது மாட்டிக்கொண்டது.

இதன்போது அந்த வழியாக வந்த மற்றுமொரு தனியார் பேருந்தின் சாரதி, களவாடிச் சென்ற பேருந்தினை அவதானித்ததுடன், பேருந்தின் சாரதி வேறு ஒருவராக இருப்பதனையும் கண்டுள்ளனர்.

இதன் காரணமாக சந்தேகம் கொண்டு, பேருந்தின் சாரதிக்கு தொலை பேசி ஊடாக தொடர்பு கொண்டனர். இந்நிலையில், பேருந்து களவாடிச் சென்றமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று குறித்த நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்”. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like