பருவம் பிழைத்த மழையால் கிளிநொச்சி பெரும்போக பயிர்ச்செய்கை பாதிப்பு!

இலங்கைத் தீவில் மழை வீழ்ச்சி குறைந்தமை காரணமாக பாரிய வரட்சியை எதிர்கொள்ளும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் கிளிநொச்சியில் மழை வீழ்ச்சி கிடைக்காமையால் நெற் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன. கடந்த சில நாட்களாக அளவுக்கதிகமாக பெய்து வரும் மழையால் பயிர்கள் மீண்டும் பாதிக்கும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக பருவம் பிழைத்த மழைவீழச்சி மற்றும் கடுமையான வரட்சி காரணமாக விவசாயிகள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்த நிலையில் பெரும்போக பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட விசாயிகள் டிசம்பர் மாதம் முழுவதும் மழைக்காக காத்திருந்தனர். மழை வீழ்ச்சி கிடைக்கவில்லை. மழைக்காக பிரார்த்தனைகளிலும் நேர்த்திகளிலும் ஈடுபட்டனர்.

அத்துடன் குளங்களிலும் வாய்க்கால்களிலும் கிடங்குகளை வெட்டியும் பம்பிகள் மூலம் வயலுக்கு தண்ணீர் இறைத்து போராடிய விவசாயிகளின் பரிதாப நிலையை குளோபல் தமிழ் செய்திகள் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களின் முன்பு மழை பெய்தத் தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

எனினும் அளவுக்கதிகமான மழை வீழ்ச்சி காரணமாக நெற்பயிர்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. மழை இன்னும் தொடரும் விதமாக காலநிலை காணப்படுகின்றது. இதனால் பயிர்கள் முற்றாக அழிந்துவிடுமா என்ற அச்சத்தில் விவசாயிகள் வானத்தை நோக்கிப் பார்த்திருக்கின்றனர்.

விரக்தியடைந்த நிலையில், கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையிலேயே நெல் வயல்கள் காணப்படுவதாக விவசாய சம்மேளன உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார். பெரும்பாலான வயல்களில் களைகள் அழிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன. இந்த நிலையில் அளவுக்கதிகமான மழை நெற் பயிர்களை மேலும் அழிக்கும் விதமாக பெய்து வருகின்றது.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமது வரட்சி கால நிவாரணம் வழங்கப்படவேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன் அரிசியின் விலை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மக்களின் வாழ்வு, பொருளாதாரம் பாதிக்கும் நிலை தோன்றியுள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறுகின்றனர்.

You might also like