சற்று முன் வவுனியா இ.போ.ச ஊழியர்கள் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு

வவுனியா இலங்கைப் போக்குவரத்து சபையின் சாலை ஊழியர்கள் தங்களுக்கு வவுனியா பழைய பேருந்து தரிப்பிடத்தை வழங்குமாறும் மற்றும் வவுனியா சாலை முகாமையாளரை மாற்றுமாறும் கோரிக்கைகளை முன்வைத்து இன்று (01-02-2017) முதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள இலங்கைப் போக்குவரத்து சபையின் அலுவலகத்தின் வாயிலை மூடி அலுவலக வளாகத்தில் நிலத்தில் அமர்ந்து பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்தனர்.

இதன்போது ஊடகத்து கருத்துத் தெரிவித்த வவுனியா இலங்கைப் போக்குவரத்து சபையின் ஊழியர்கள்

ஏ9 வீதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஊழியர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், அத்துடன் இபோச பேருந்து தரிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தனியார் பேருந்து தரித்து நிற்பதாகவும் குற்றஞ்சாட்டினர். மேலும் வவுனியா இலங்கைப் போக்குவரத்து சபையின் சாலை முகாமையாளர் எச்.எம்.டி.ஜே.சொய்சா மற்றும் பொலிசார் இபோச ஊழியர்களுக்கு எதிராக செயல்ப்படுவதகாவும் அதன் காரணமாக வவுனியா இலங்கைப் போக்குவரத்து சபையின் சாலை முகாமையாளரை மாற்றஞ்செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஊழியர்களின் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கைப் போக்குவரத்து சபையின் சாலை முகாமையாளர் எச்.எம்.டி.ஜே.சொய்சா

தன் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் தான் யாருக்கும் எதிராக செயல்படவில்லை என தெரிவித்ததுடன் அரச போக்கவரத்து விதிமுறைகளுக்கு அமைவாகவும் தனது மேலதிகாரிகளின் கட்டளைக்கு இணங்கவும் பணியாற்றிவருவதாகவும் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பை கைவிட்டு வேலைக்கு திரும்பவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

You might also like