மைதானத்தை உழுத உழவு இயந்திரத்தை மறித்து மக்கள் எதிர்ப்பு..! கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் பெரியபரந்தன் தாரணிகுடியிருப்பு வானவில் விளையாட்டு மைதானத்தை இன்று காலை உழவு செய்த உழவு இயந்திரத்தை மறித்து பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்

குறித்த காணி தங்களுடையது என்று இருவர் உரிமை கோரி வருகின்றனர். எனினும், குறித்த காணியை தங்கள் கிராம இளைஞர்களும், முன் பள்ளி சிறார்களும் 1991ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தி வருகின்றனர் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் குறித்த காணி தொடர்பில் அடிக்கடி உரிமை கோருகின்றவர்களுக்கும், தாரணி குடியிருப்பு பொது மக்களுக்கும் இடையே முரண்பாடுகள் நிலவிவந்துள்ளன.

இந்நிலையில், இன்று காலை காணியை உரிமை கோருகின்றவர்களால் உழவு இயந்திரம் மூலம் விளையாட்டு மைதானம் உழவு செய்யப்பட்டுள்ளது.

இதனை அறிந்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட இளைஞர்கள் உழவு இயந்திரத்தை மறித்து வைத்து தங்களின் எதிர்ப்பை வெளியிட்டனர்.

அத்துடன், உழவு செய்யப்பட்ட பகுதியை மீளவும் வழமைபோன்று சம தரையாக மாற்றியமைத்து தருமாறும் அதுவரை உழவு இயந்திரத்தை விடுவிக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதன் போது பொலிஸார் சமரச நடவடிக்கையில் ஈடுப்பட்டு உழவு இயந்திரத்தை விடுவித்ததோடு, கிராமத்தின் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் இருவரை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

You might also like