கணவனை கொன்ற மனைவி: 7 ஆண்டுகளுக்கு பின் கள்ளக்காதலனுடன் கைது

கணவரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மனைவியை ஏழு ஆண்டுகளுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் சேர்த்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசலைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செந்தில், இவர் தனது மனைவி முத்துலட்சுமி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் முத்துலட்சுமிக்கும், அவர் வேலை பார்க்கும் கடையின் உரிமையாளர் மகன் மாரிராமர் என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்த விடயம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததால், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வெள்ளமரத்துப்பட்டிக்கு, முத்துலட்சுமி தனது 3 குழந்தைகள் மற்றும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வந்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, செந்தில் தனது மனைவியை வீட்டுக்கு அழைத்துள்ளார். ஆனால், முத்துலட்சுமி அவருடன் வர மறுத்துவிட்டார்.

எனினும், செந்தில் தன்னுடன் வரவேண்டும் என்று முத்துலட்சுமியை வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில், தனது கணவரை கொலை செய்ய நினைத்த முத்துலட்சுமி, தோட்டம் ஒன்றிற்கு அவரை வரவழைத்து தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.

பின்னர், தனது குழந்தைகளுடன் கடலூருக்கு தப்பிச் சென்ற முத்துலட்சுமியை, 8 மாதங்கள் கழித்து ஒட்டன்சத்திரம் பொலிசார் கைது செய்துள்ளனர், அதன்பின்னர் ஜாமீனில் வெளிவந்த இருவரும் தலைமறைவாகினர்.

இந்நிலையில் மூலசத்திரம் பகுதியில் இருவரும் இருப்பதை அறிந்த பொலிசார், ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

You might also like