கௌதாரிமுனை அ.த.கபாடசாலை மீள ஆரம்பிக்குமாறு பெற்றோர் கோரிக்கை

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் யுத்தத்தினால் அழிவடைந்து இதுவரை மீள ஆரம்பிக்கப்படாது காணப்படும் கௌதாரிமுனை அ.த.கபாடசாலை மீள ஆரம்பிக்குமாறு அப்பிரதேச மாணவர்கள் பெற்றோர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனைப்பகுதியில் சுமார் என்பது வருடங்களுக்கும் மேலாக பழமைவாய்ந்ததாக கௌதாரிமுனை அ.த.க பாடசாலை காணப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த 1991ம் ஆண்டு யுத்தம் காரணமாக செயலிழந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு மக்கள் மீள்குடியேறி ஏழு ஆண்டுகளாகியும் குறித்த பாடசாலை இதுவரை மீள ஆரம்பிக்கப்படவில்லை.
இந்நிலையில் இப்பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்கள் அயல் கிராமத்தில் அமைந்துள்ள விநாசியோடை அ.த.க பாடசாலைக்கே செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.
மேலும் இக்கிராமத்திற்கான போக்குவரத்து சேவைகள் எவையும் இல்லாத நிலையில் இந்தப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே தரம் 10 வரையான வகுப்புக்களை கொண்டு இயங்கிய இப்பாடசாலையில் தற்போது தரம் 5 வரையான வகுப்புக்களையாவது மீள ஆரம்பிக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.