கிளிநொச்சி வளாகத்தில் பௌத்த விகாரை: பிள்ளையாா் கோவில் அமைக்க மறுப்பு

யாழ். பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் பீடங்களில் சிறியளவில் விநாயகர் கோவில் ஒன்றை அமைத்து வழிபடும் மாணவர்களின் முயற்சிக்கு நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் உயர் கல்வி நிலையத்தில் காணப்படவேண்டிய பன்மைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலங்களில் பாரிய இராணுவ முகாமாக காணப்பட்டது. முன்னைய அரசின் காலத்தில் இராணுவத்திடம் இருந்து மீளப்பெறப்பட்ட காணி யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

குறித்த காணியில் இராணுவம் இருந்த காலத்தில் அவர்களின் வழிபாட்டுக்கென புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டிருந்தது.

குறித்த புத்தர் சிலையானது பல்கலைக்கழகம் காணியை பொறுப்பேற்ற பின்னரும் அங்கு தொடர்ந்தும் காணப்பட்டு வந்த நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக விவசாயப் பீடம், பொறியியல் பீடம், மற்றும் தொழிநுட்ப பீடம் என்பன ஆரம்பிக்கப்பட்டு கல்விச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சூழலில் புத்த கோவிலும் பேணப்பட்டே வந்தது.

இந்நிலையில் அண்மையில் புத்தர் சிலை இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டதனைத் தொடர்ந்து அதனை புதுப்பிப்பதற்கான பணிகளை பல்கலைக்கழக நிர்வாகம் முன்னெடுத்திருந்தது.

இந்நிலையில் இந்து மத மாணவர்கள் சிலர் விநாயகர் சிலையொன்றினை மரத்தின் கீழ் நிறுவி பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் இச்செயற்பாட்டுக்கு தடை விதித்துள்ளதுடன் உடனடியாக சிலையை ஆலயத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை தமக்கான முறையான ஆலயம் கிடைக்கப்பெறும் வரை தற்காலிகமாக வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு மாணவர் தரப்பினால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

புத்தர் சிலை அமைக்கப்பட்ட இடம் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் புனரமைக்கப்பட்டு வரும் நிலையில் தமக்கான வழிபாடுகளுக்கான இடம் நிர்வாகத்தால் மறுக்கப்படுவதற்கான காரணம் என்ன? என்பது தொடர்பில் மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பௌத்த மத கோவில் அமைந்திருப்பது எமக்கு இடையூறு அல்ல, அனால் எமது வழிபாடுகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜாவை தொடர்புகொண்டு கேட்டபோது இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக கருத்துக் கூற முடியாது, என்றும் அதற்கு பல்கலைக்கழக பதிவாளருடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்தார்.

அதனடிப்படையில் பல்கலைக்கழக பதிவாளருடன் தொடர்பு கொண்ட போது நிர்வாகம் இவ்விடயம் தொடர்பில் எதனையும் அறியவில்லை எனவும் தெரிவித்தார்.

 

You might also like