பூந்தோட்டம் முகாமிலிருந்த 97 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற முன்வரவில்லை: டி.எம்.சுவாமிநாதன்

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாம் மூடப்பட்டுள்ளபோதும், 97 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற முன்வரவில்லையென மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பூந்தோட்டம் நலன்புரி முகாம் குறித்து ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன், வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் ஆயிரத்து 249 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 495 பேர் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில், குறித்த முகாம் 2011ஆம் ஆண்டுடன் மூடப்பட்டுவிட்டது. 2011ஆம் ஆண்டின் பின்னர் பூந்தோட்டம் முகாம் மூடப்பட்டதையடுத்து, உலர் உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டது.

முகாமிலிருந்த பெரும் எண்ணிக்கையானவர்கள் பல்வேறு மீள்குடியேற்ற திட்டங்களின் கீழ் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.

ஆனால், 97 குடும்பங்களைச் சேர்ந்த 354 பேர் எந்த மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழும் தாமாக முன்வந்து மீள்குடியேற முன்வரவில்லை.

அவர்கள் பூந்தோட்டம் முகாமிலிருந்த பகுதிக்கு அண்மையில் உள்ள பகுதியிலேயே தொடர்ந்தும் இருப்பதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

You might also like