வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்த கிளிநொச்சி விவசாயிகள்

கிளிநொச்சியில் நெல் அறுவடையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள்,  அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர வைப்பதற்கான தளங்கள் இல்லாமை காரணமாக சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

இந்நிலையில் வீதிகளில் நெல்லை உலரப் போடுவதாகத் தெரிவித்த விவசாயிகள்,

வாகனங்களைக் கவனமாகச் செலுத்தி, தங்களுக்கு ஒத்துழைக்குமாறு, சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

நெல் உலர வைப்பதற்கான தளங்கள் இல்லாமை காரணமாக ஈரமாக நெல்லை விற்பனை செய்வதாகவும், எனவே, ஒவ்வொரு கமக்கார அமைப்புக்கும் குறைந்தது ஒரு தளத்தையாவது அமைத்துத் தருமாறும் விவசாயக் குழுக் கூட்டங்களின்போது, விவசாயிகளால்  கோரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும், விவசாயிகளின் இக்கோரிக்கை தொடர்பில், இதுவரையில் கவனத்திற் கொள்ளப்படவில்லை.

இது இவ்வாறிருக்க, இரணைமடுக் குளத்தின் கீழான 22 கமக்கார அமைப்புகளில் 21 கமக்கார அமைப்புகளுக்கு, நெல் உலர விடும் தளங்கள் தற்போது அமைக்கப்படுகின்றன.

ஆனால், ஏனைய குளங்களின் கீழான விவசாயிகள், உலர விடுவதற்கான தளங்கள் இல்லாமையால் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

You might also like