கிணற்றில் வீழ்ந்து குடும்ப பெண் பலி..! பரந்தனில் சம்பவம்

கிளிநொச்சி பரந்தன் கோரக்கன்கட்டுப் பகுதியில் 4 பிள்ளைகளின் தாயாரான குடும்பப் பெண் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

54 வயதான பாலகிருஸ்ணன் கமலாதேவி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 12.10 மணியளவில் வீட்டுக் கிணற்றில் வீழ்ந்து இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று நேற்று மதியம் வீடு திரும்பியுள்ளார். எனினும், இன்று இரவு குறித்த பெண் வீட்டில் காணாத நிலையில், உறவினர்கள் அவரை தேடிப்பார்த்துள்ளனர்.

இதன்போது குறித்த பெண், உயிரிழந்த நிலையில், கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். இந்நிலையில், நீர் எடுக்கும் வாளியும் கிணற்றில் வீழ்ந்து காணப்படுகின்றமையினால், இரவு நீர் எடுக்கச் சென்ற நிலையில் குறித்த பெண் தவறி வீழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like