கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் வருடாந்த மாணவர் கௌரவிப்பு நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் முதல் பத்து நிலைகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு (10.02.2017) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு கல்வி வளர்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலய அதிபருமான பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு, 2016 ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தர பரீட்சையில் விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம், கலை, உயிரியல் தொழில்நுட்பம், பொறியியல் தொழிநுட்பம் ஆகியவற்றில் தோற்றி மாவட்டத்தில் முதல் பத்து இடங்களை பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையானது பல்கலைக்கழக கல்வியை தொடர்வதற்கு போதிய பொருளாதார வசதியை கொண்டிராத மாணவர்களுக்கு அவர்களது கல்வியை தொடர்வதற்கு கடன்களை வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடன் பணத்தை குறிப்பிட்ட மாணவர்கள் கல்வியை பூர்த்தி செய்து தொழில் வாய்ப்பை பெற்ற பின்னர் மீண்டும் செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு மீள செலுத்துகின்ற பணம் பிரிதொரு மாணவனுக்கு வழங்கப்படுகிறது என நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் யாழ். போதான வைத்தியசாலையின் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேல்,

கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் என்.சுதாகரன், மற்றும் கோட்டக் கல்வி அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

You might also like