‘உண்மை நிலையை அறிய, இணைத்தலைவர்கள் இரணைதீவுக்கு செல்ல வேண்டும்

கிளிநொச்சி, பூநகரி, இரணைதீவின் நிலவரங்களை நேரில் சென்று அறிவதற்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள், அங்கு செல்ல வேண்டுமென, இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், 1992ஆம் ஆண்டு இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்து, முழங்காவில், இரணைமாதா நகரில் 336 குடும்பங்கள் தற்போது தங்கியுள்ளனர். 2007ஆம் ஆண்டு வரை, இரணைதீவுக்குச் சென்று தொழில் புரியவும் கால்நடைகளைப் பராமரித்து வருவதற்கான வாய்ப்பு காணப்பட்டது.

மீள் குடியேற்றத்தின் பின்னர்,  இந்நிலைமை மாறியுள்ளது. இரணைதீவின், சிறிய தீவின் கிழக்குப் பகுதியிலேயே தற்போது மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகின்றது. ஆனால், அங்கு ஒருவரும் தங்க முடியாது. இரணைதீவின் பெரிய தீவு பகுதியில் படை முகாம்கள் உள்ளன. இப்பகுதியில்தான் தேவாலயமும் உள்ளது. இந்நிலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலே இணைத்தலைவர்கள்,  இரணைதீவுக்குச்  சென்று, நிலைமைகளை அவதானித்து எமக்குச் சாதகமான முடிவுகளை எடுப்பதாக கூட்டங்களில் தெரிவித்திருந்தார்கள்.

ஆனால், அது செயற்படுத்தப்படவில்லை.இணைத்தலைவர்கள், தனித்தனியாக இரணைதீவுக்குச் செல்வதில் எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை. கேப்பாப்புலவு மக்கள், தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நடாத்தும் நிலையில், இணைத்தலைவர்களும் இரணைத்தீவினை விடுவிப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

கிளிநொச்சி மாவட்டத்தினைப் பொறுத்த வரையில், எமது பிரச்சினை வித்தியாசமானது. 336 குடும்பங்களின் தலைவிதியினை தீர்மானிக்கின்ற இரணைதீவில் இருந்து, படைகள் வெளியேறி நாம் மீள் குடியேறவும் தங்கி நின்று தொழில் புரியவும் எமது கால்நடைகளையும் எமது கிராமங்களையும் பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகள், இரணைதீவில் பிரச்சினை இல்லை என்ற ரீதியில் தகவல்களை வெளியிடுகின்றார்கள்.

அதில் எந்தவிதமான உண்மைகளும் இல்லை. 1992ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்த நிலையில், முழங்காவில், இரணைமாதா நகரில் தங்கியுள்ளோம்” என அந்த  மக்கள் மேலும் கூறினார்கள்.

You might also like