கேப்பாப்பிலவு காணிகளை விடுவிக்க ராணுவம் இணக்கம்!

விமானப்படை மற்றும் ராணுவத்தின் பிடியிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு காணிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதியிடம் ராணுவ தளபதி உறுதியளித்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதன்படி குறித்த காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மீள்குடியேற்ற அமைச்சர் தம்மிடம் உறுதியளித்ததாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை இன்று சந்தித்த மாவட்ட அரசாங்க அதிபர் இவ்விடயத்தை மக்களிடம் கூறியுள்ளார். எனினும், இவ்வாறான பல வாக்குறுதிகளை நம்பி தாம் ஏமாற்றமடைந்ததாக தெரிவித்த மக்கள், தமது காணிகளுக்குள் செல்ல அனுமதிக்கும்வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லையென உறுதியாக தெரிவித்துள்ளனர்.

மழைக்குள் குழந்தைகளுடன் தவிக்கின்றனர் கேப்பாப்பிலவு மக்கள்: சர்வமத குழுவினர் விஜயம்

தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, காலியிலிருந்து சர்வமத குழுவொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) கேப்பாப்பிலவிற்கு செல்லவுள்ளனர்.

கேப்பாப்பிலவில் தற்போது மழை பெய்து வருவதால், குழந்தைகளுடன் இம் மக்கள் பெரும் துன்பங்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

விமானப்படை மற்றும் ராணுவம் அபகரித்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இம் மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இன்றுடன் 15 நாட்களை எட்டியுள்ளது.

இம் மக்களுக்கு ஆதரவாகவும் ராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தி புதுக்குடியிருப்பு மக்கள் நடத்திவந்த சத்தியாக்கிரக போராட்டம், 12ஆவது நாளான இன்று காலை முதல் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டமாக மாற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like