வவுனியா பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : வர்த்தக நிலையத்தில் தங்க நகைகள் மீட்பு

வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின்   காரணமாக இன்று (14.02.2017) வவுனியா வர்த்தக நிலையத்திலிருந்து 12பவுன் தங்கநகைகள் மீட்கப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கடந்த 17.11.2016 அன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது.

குறித்த நபர்கள் சிலாபத்துறை, ஒட்டிசுட்டான், அடம்பன், மன்னார், மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம், செட்டிகுளம், வவுனியா ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து இந்தக் கும்பல் செயற்பட்டு வந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட் விசாரணைகளின் பிரகாரம் மன்னாரில் களவாடப்பட்ட தங்கநகைகள் வவுனியா வர்த்தக நிலையத்தில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி நிசிர குமார மற்றும் உப பொலிஸ் அத்தியட்சகர் பியசிரி பர்னாந்து ஆகியோரின் வலிகாட்டலில் பிராந்திய தீர்க்கப்படாத குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொ.ப.இரத்ணதிலக மற்றும் ஜேசுதாசன் (42521) , ஜீவானந்தன் (45401) , கருணாதிலக (52391) , ரனதுங்க (29246) , சாலிய (74331) , வீரசேன (78448) , சானக (12159) , பிரசன்ன (81200) , அதுல (80891) ஆகிய பொலிஸார் அடங்கிய குழு இன்று (14.02.2017) குறித்த வர்த்த நிலையத்தினை சுற்றிவளைத்து வர்த்தக நிலையத்திலிருந்து 12பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பொருட்களை ஒப்படைப்பதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like