பொதுமக்களிடம் உதவி கோரும் மூன்று பெண் குழந்தைகளின் தமிழ் பெற்றோர் !

ஹட்டன், திம்புல பொலிஸ் பிரிவில் கிறிஸ்டஸ்பார்ம் தோட்டத்தில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்களான தம்பதிக்கு ஒரே நேரத்தில் பிறந்த மூன்று பெண் குழந்தைகளை வளர்க்க பெற்றோர் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

இந்த மூன்று குழந்தைகள் கடந்த மாதம் 29 ஆம் திகதி டிக்கோயா வைத்தியசாலையில் சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் பிறந்தன.

குழந்தைகளின் எடை குறைவாக இருந்ததால், அவை பேராதனை, கம்பளை, அவிசாவளை ஆரம்ப வைத்தியசாலைகளின் சிறுவர் பிரிவுகளில் இன்கியூபேட்டர் இயந்திரங்களில் சில தினங்கள் வைக்கப்பட்டு, பின்னர் மருத்துவர்களால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.

குழந்தைகளின் பெற்றொரான 39 வயதான சரோஜாதேவி மற்றும் 49 வயதான வீரன் கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு பாடசாலை செல்லும் 12 மற்றும் 11 வயதான பெண் பிள்ளைகள் உள்ளன.

இந்த பிள்ளைகள் ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்றனர். வீரன் கிருஷ்ணகுமார் கொழும்பில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

தாய், தேயிலை கொழுந்து பறிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர்களுடன் கிருஷ்ணகுமாரின் தாயும் தந்தையும் வசித்து வருகின்றனர்.

கிருஷ்ணகுமார் சம்பாதிக்கும் பணத்திலேயே குடும்பத்தினர் அனைவரும் வாழ்ந்து வருகின்றனர்.

பிறந்துள்ள குழந்தைகளுக்கு பாலூட்டும் அளவுக்கு தேவையான அளவு பால் தனது மனைவியிடம் இல்லை எனவும் மருத்துவர்களின் பரிந்துரைகளுக்கு அமைய தாய் பாலுக்கு மேலதிகமாக பால் மாவை வழங்க வேண்டியுள்ளது எனவும் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

பால் மாவை கொள்வனவு செய்ய பெரும் தொகை பணம் செலவாவதாகவும் கடும் பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் வாழும் தமக்கு இது பெரும் பிரச்சினையாக இருப்பதாகவும் கிருஷ்ணகுமார் கூறியுள்ளார்.

எவ்வளவு பொருளாதார கஷ்டங்கள் இருந்தாலும் தமக்கு பிறந்த குழந்தைகளை சிறப்பாக வளர்த்து ஆளாக்க வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என சரோஜாதேவி தெரிவித்துள்ளார்.

You might also like