கிளிநொச்சி மண்ணின் தங்க மகள் தனுசிகா

20-12-2016 அன்று 2016இற்கான  இலங்கையின் தேசிய மேசை பந்தாட்டப் போட்டி யாழ்ப்பாணம் பருத்திதுறையில் இடம்பெற்றது.

தனி போட்டில் இலங்கையில் இருந்து 11 மாவட்டங்களில் இருந்து 11 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அநுராதபுரம்,மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, யாழப்பாணம், கிளிநொச்சி,கொழும்பு போன்ற பல மாவட்டங்களில் இருந்தும் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்

இறுதிப் போட்டி கிளிநொச்சிக்கும் கொழும்புக்கும் இடையே இடம்பெற்றது. எவரும் எதிரபார்க்காத வகையில் போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய கிளிநொச்சி போட்டியாளர் 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய மேசைப் பந்தாட்ட போட்டியின் வெற்றியை தனதாக்கி தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டார்.

பன்னிரண்டு வயது பிரிவில் தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கத்தை பெற்று கிளிநொச்சியின் தங்க மகளாக மாவட்டம் திரும்பியவர் உதயநகர் மேற்கைச் சேர்ந்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவி செல்வி பாலகிருஸ்ணன் தனுசிகா.1983 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் இடம்பெற்ற வன்செயல்களால் பாதிக்கப்பட்டு கிளிநொச்சியில் குடியேறியவர்கள்தான் தனுசியாவின் பெற்றோர். தனுசியாவின் தாய் ஒரு மாற்றுவலுவுள்ளோர், தந்தை சிறுவியாபாரம் செய்து வருகின்றார். தனுசியாவின் தாய் விஜயலக்சுமி 1990 களிலிருந்து மாவட்ட மாற்றுவலுள்ளோர் அமைப்பில் இணைந்து அவர்களுக்காக செயற்பட்டு வருவதோடு, மேலும் பல பொதுப் பணிகளிலும்  ஈடுப்பட்டு வருகின்றார்.

பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களது  இரண்டு மகள்களையும்  படிப்பித்து வருகின்றார்கள். இதில் தனுசியா இரண்டாவது மகள். தற்போது தரம் ஒன்பதில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தனுசியா இயல்பாகவே விளையாட்டில் அதிகம் ஈடுபாடுகொண்டவர், அர்ச்சுனனுக்கு துரோனர் வாய்த்தது போன்று தனுசியாவுக்கு இரண்டு துரோனர்கள் குருவாக கிடைத்துள்ளனர் ஒருவர் மாவட்ட மேசை பந்து மற்றும்  மெய்வல்லுநர் விளையாட்டுப்  பயிற்றுவிப்பாளர் எஸ்.குமார் மற்றையவர் பாடசாலை விளையாட்டு பொறுப்பாசிரியர்        ம.வினோகாந்தன் இவர்களே தனுசியாவை கிளிநொச்சியின் தங்க மகளாக மாற்றியவர்கள்.

இவர்கள் தொடர்பில் தனுசியா குறிப்பிடும் போது மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளராக பணியாற்றி வரும் எஸ்.குமார் அவர்கள் எனக்கு முதன் முதலாக  மேசைப் பந்தாட்ட விளையாட்டை பயிற்றுவித்தார்.

இதன் மூலம் நான் இவ்விளையாட்டை ஆர்வத்ததுடன் சக மாணவர்களுடன்  சேர்ந்து பயின்று வந்தேன்.

விடுமுறை காலங்களிலும் ஓய்வு நேரங்களிலும் குமார் சேர் அவர்கள் எமக்கு மிகவும் சிரத்தையுடன் இவ்விளையாட்டை பயிற்றுவித்தார்.  அவரின் வழிநடத்தலில் நாமும் விரும்பி ஆர்வத்துடன் விளையாட கற்றுக்கொண்டோம். பாடசாலை நேரங்களை தவிர ஏனைய நேரங்களில் தனது தனியார் கல்வி நிலையத்திலும் எங்களை பயிற்றுவிப்பதில் தனது நேரத்தை செலவு செய்து வந்தவர். எனக் குறிப்பிட்ட தனுசியா தனது மற்றொரு குருவை பற்றி இப்படிக் கூறுகின்றார்

 எனது பாடசாலை  விளையாட்டுப் பொறுப்பாசிரியரான ம.வினோகாந்தன் அவர்கள் பாடசாலையில் எமது குழுவுக்கு மிகவும் அக்கறையுடன் பயிற்சிகளை வழங்கி வந்தார். யாழ்பாணத்திலிருந்து தினமும் வந்தும் கூட காலநேரம் பாராமல் எமக்கான பயிற்சிகளை வழங்குவார். அத்துடன் எமக்குத் தேவையான விசேடப் பயிற்சியை விசேட பயிற்சியாளர்களிடம் பெறுவதற்காக   யாழ்பாணத்திற்குச்  அழைத்துச்சென்று பயிற்றுவித்து வந்தார் இவ்விரு ஆசான்களும் எனக்கு கூடிய பயிற்சியை வழங்கியமையால்  மாவட்டத்திலும் மாகாணத்திலும் தேசியத்திலும்  என்னால் சாதிக்க முடிந்தது.  என  நன்றியோடு தனது பயிற்றுவிப்பாளர்களை பற்றிக் குறிப்பிட்ட தனுசியா

ஓவ்வொரு விளையாட்டின் போதும் நான் கேடயங்களை பெற்று வரும்போது  குமார்சேர்; எனது வீட்டுக்கு வந்து என்னை தட்டிக்கொடுத்து பாராட்டுவார்.  அதேபோல் பாடசாலையில் வினோகாந்தன்சேர் என்னை மிகவும் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்துவார்  இவர்களின் அக்கறையும் ஊக்கமும்தான் என்னை சாதனையாளராக வெளிக்கொணர முடிந்தது.  ஓவ்வொரு முறையும் நான் புதிய புதிய குழுவுடன் போட்டியை எதிர்கொள்வதற்கு புதிய நுட்பங்களை எனக்கு கற்று கொடுத்து எனக்கு உத்வேகத்ததை ஏற்படுத்தி கொடுத்து இம்மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்தமையையின் பெருமை இவர்களையே சாரும் என்றும் தெரிவித்தார்.

மேலும் எனது பெற்றோர்கள், பாடசடாலை அதிபர்  ஆசிரியர்கள் சக மாணவர்கள் அனைவரும் வழங்கிய உதவிகள் ஒத்துழைப்புக்களுக்கு எனது சாதனைக்கு உதவியது என்றார்.கிளிநொச்சியில் முதன் முதலாக தனுசியா மேசைப் பந்துப் போட்டியில் தேசிய மட்டத்தில் தங்கப்பதகம் வென்று  மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த போதும் மாவட்டமும், மாவட்டக் கல்விச் சமூகமும் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

எல்லாவற்றுக்கும் விழா நடத்தும் எமது சமூகம் தனுசியாவுக்கு ஒரு பாராட்டு விழா அல்லது கௌரவிப்பு விழா நடத்தாமை  கவலைக்குரிய விடயம் என பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்;.றோல் போட்டியில்  கிளிநொச்சி மாவட்ட அணி மூன்றாம் இடம் பெற்றதனை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று கடந்த மாதம பொது அமைப்பு ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதன் போது தனுசியா உள்ளிட்ட வேறு விளையாட்டுகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்கள் றோல் போல் அணியுடன் சேர்த்து கௌரவிக்கபட்டிருந்தனர்.

ஆனால் தங்கப் பதக்கம் வென்று கிளிநொச்சியின் தங்க மகளாக வந்த சிறுமியை பாராட்டி கௌரவிக்க இந்த சமூகம் தவறிவிட்டது.

தனுசியாவுக்கு மேற்கொள்ளும் பாராட்டும் கௌரவிப்பும் என்பது வெறுமனே தனுசியாவுக்கு மட்டுமானது அல்ல அது ஒரு முன்னுதாரணமான நிகழ்வாக ஏனைய பலரையும்  எதிர்காலத்தில் பல பதக்கங்கள் வெல்ல உந்து சக்தியாகவும் அமைந்திருக்கும் ஆனால் கிளிநொச்சியின் தங்க மகளுக்கு கிளிநொச்சி  அதனை செய்ய தவறிவிட்டது. என்பதே பலரின் கவலை.

You might also like