மக்களின் நியாயமான கோரிக்கைகள்! புரிந்து கொள்ளாத அரசாங்கம்?

மஹிந்த அரசாங்கத்தின் காலப் பகுதியில் தமிழ் இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக, கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்கள் வீதிக்கு வந்து போராடியிருந்தனர்.

புலனாய்வாளர்கள், இராணுவத்தினர், பொலிசார் என பலதரப்பட்ட அச்சுறுத்தல்களையும் அவர்கள் கடந்திருந்தனர். மக்கள் போராட்டங்களுக்குத் துணையாக தமிழ் அரசியல் தரப்பினரும் வீதியில் இறங்கியிருந்தனர்.

யுத்தத்தின் போது மஹிந்த அரசாங்கம் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும், அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட அடக்குமுறை ஆட்சி தொடர்பாகவும் தமிழ் மக்கள் குரல் கொடுக்கத் தவறவில்லை.

அதேநேரம் மஹிந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்திருந்தனர்.

இதன் விளைவாகவே 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், யுத்த களத்தில் இராணுவத் தளபதியாக செயற்பட்ட சரத் பொன்சேகா போட்டியிட்ட போதும் தமிழ் மக்களின் வாக்குகள் அவருக்குக் கிடைத்திருந்தன.

இருப்பினும் அப்போதைய அரசியல் நிலமை மற்றும் சூழ்ச்சிகள் காரணமாக சரத் பொன்சேகாவால் வெற்றி பெற முடியவில்லை.

அதன் பின்னர் 2015ம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் வந்த போது தமிழ் பேசும் மக்கள் ஒட்டுமொத்தமாக அணிதிரண்டு மஹிந்தவுக்கு எதிராக வாக்களித்து தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டு வருவதற்கு ஆதரவளித்திருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது.

65 வருட காலத்திற்கு மேலாக இடம்பெற்று வரும் தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா என்ற ஆதங்கத்துடன் இருந்த தமிழ் மக்கள் சர்வதேச சமூகம் தமக்கான ஒரு தீர்வைப் பெற்றுத் தரும் என நம்பியிருந்தனர்.

இந்த நாட்டில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கு மஹிந்த அரசாங்கத்திற்கு உதவிய சர்வதேச சமூகம், தாம் எதிர்பார்த்த மற்றும் தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை மஹிந்த அரசாங்கம் நிறைவேற்றாமையால் அந்த ஆட்சி மீது அதிருப்தி கொண்டு தமிழ் மக்களின் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி மஹிந்த அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடிகளை ஐ.நா ஊடாக கொடுத்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தென்னிலைங்கையின் பிரதான அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து இந்த அரசாங்கம் உருவானது.

மஹிந்த மீது ஏற்பட்ட அதிருப்தி, சர்வதேசத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கை என்பன காரணமாக தமிழ் இனம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளித்து தமது பிரச்சினை தீர்க்கப்படும் என நம்பியிருந்தது.

ஆனால் இரண்டு வருடங்கள் கடந்தும் தமிழ் இனம் இந்த ஆட்சி மாற்றத்தால் எதிர்பார்த்த நன்மையை அடையவில்லை.

தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவி, அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர் பதவி என பதவிகள் கிடைத்திருக்கின்றன.

அந்த பதவிகளைக் கொண்டு தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய முடிந்துள்ளதா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் இங்கே எழுகின்றது.

கடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று திட்டமிட்ட குடியேற்றங்கள், பௌத்தமயமாக்கல், விகிதாசாரக் குறைப்பு என்பன மற்றொரு புறத்தில் இடம்பெற்று வருவதுடன், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் கூட இன்னும் தீர்க்கப்படாத நிலையிலேயே இருக்கின்றன.

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிவிடுவிப்பு என்பன இழுபறியிலேயே உள்ளன.

ஆங்காங்கே சில சில காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் அவை முழுமையானதாக,மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் முகமாக இடம்பெறவில்லை.

வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் கூட தமிழ் மக்கள் நலன் சார்ந்ததாக மேற்கொள்ளப்படவில்லை. இதனாலயே இந்த அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை தளர்ந்து போயிருக்கின்றது.

அரசாங்கத்தின் மீது மட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதும் அதிருப்தி கொண்ட தமிழ் மக்கள் தாமாகவே பிரச்சினைக்குத் தீர்வு காண வீதிக்கு இறங்க முற்பட்டுள்ளார்கள்.

தமது உரிமைகளையும், தமது அபிலாசைகளையும் முன்வைத்து தாமாகவே அதனைப் போராடி பெற வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை தாமாகவே முன்வந்து மேற்கொண்டிருந்தனர்.

அந்த போராட்டம் நான்காவது நாளில் மக்கள் போராட்டமாக விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிய போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நேரடியாக வந்து வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

அதன்பின் அந்த வாக்குறுதியின் அடிப்படையில் கடந்த 9ம் திகதி அலரி மாளிகையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் 15 பேர் அரச தரப்பு பிரதிநிதிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு கேப்பாபிலவு- புலக்குடியிருப்பு மக்கள், புதுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு வாரங்களைக் கடந்தும் இந்தப் போராட்டம் தொடர்பில் அரசாங்கமோ அல்லது தமிழ் அரசியல் தரப்புகளோ காத்திரமான நடவடிக்கை எடுத்தததாகத் தெரியவில்லை.

அவ்விடத்துக்கு வருகின்ற அரசியல்வாதிகள் போராட்டத்தில் ஈடுபடும் மக்களுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுப்பதிலேயே ஆர்வம் காட்டுவது தெரிகிறது.இந்தப் போராட்டம் குறித்து அரசாங்கம் உதாசீனம் செய்வது முறையல்ல.

இந்த மக்கள் போராட்டங்கள் மேலும் தீவிரமடைவது சர்வதேச ரீதியில் அரசுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அது நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்காது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போதைய சூழலில் மக்கள் ஜனநாயக ரீதியாக போராடக் கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டமையும் ஒரு காரணம்.

இந்த நிலையில் மக்கள் தமக்கான கோரிக்கைகளை முன்வைத்து தமக்கான உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க முடிகிறது.மக்களின் நியாயமான அபிலாசைகள் குறித்து அரசு சிந்தித்து செயற்படுவது அவசியம்.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அல்லது அதனைத் தக்க வைப்பது ஆட்சியாளர்களின் கையிலேயே தங்கியுள்ளது.

You might also like