மீள்குடியேறி 13 வருடங்கள்! வீடுகள் இல்லையென பனிக்கர்புளியங்குளம் மக்கள் கவலை

வீட்டுத்திட்ட வசதிகள் கிடைக்காமையால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா, பனிக்கர் புளியங்குளம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட நொச்சுமோட்டை கிராம சேவகர் பிரிவில் உள்ள ஒரு கிராமமே பனிக்கர்புளியங்குளம்.

யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடப்பெயர்ந்த இக்கிராம மக்கள் இந்தியாவிலும், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தஞ்சம் அடைந்திருந்த நிலையில் 2004 ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்டனர்.

இவ்வாறு மீள் குடியேறிய 162 குடும்பங்கில் 59 குடும்பங்களுக்கு வீடுகள் கிடைத்த போதிலும் ஏனையோருக்கு இது வரை வீட்டுத்திட்டங்கள் கிடைக்காததுடன், உப குடும்பங்களுக்கும் இத் திட்டம் கிடைக்காத நிலை காணப்பட்டு வருகின்றது.

மீள்குடியேறி 13 வருடங்கள் கடந்துள்ள போதும் வீட்டுத்திட்டம் மட்டுமன்றி இக்கிராமத்தின் உள்ளக வீதிகள் உட்பட பிரதான வீதிகளும் செப்பனிடப்படாமல் உள்ளதுடன் நீர்ப்பிரச்சனைகளை இம் மக்கள் எதிர்கொள்கின்றர்.

மழைக்கும், வெயிலுக்கும் ஊசலாடிக் கொண்டிருக்கும் தற்காலிக கொட்டில் வீடுகளில் வாழும் இம் மக்கள், அரசாங்கத்தால் வழங்கப்படும் வீட்டுத் திட்டங்களில் தமது கிராமத்தையும் முன்னுரிமைப்படுத்தி தாம் நிம்மதியாக வாழ அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உதவமுன்வர வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like