கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் இன்று (20) இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை உடனடியாக வெளியிடுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
நீண்ட காலமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவினர்களின் விடுதலைக்காக பல போராட்டங்களை நடத்தியிருந்தோம்.
அரசியல்வாதிகள் அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், எனப் பலரும் காலத்திற்கு காலம் பல்வேறு உறுதிமொழிகள் மற்றும் வாக்குறுதிகளை வழங்கிய போதும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இவர்களை நம்பியே தொடர்ந்தும் ஏமாற்றத்திற்கு உட்பட்டோம்.
எனவேதான் நாங்கள் எங்களுக்கான நிரந்தர தீர்வை எதிர்பார்த்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம். என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்கள் இலங்கை அரசே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை உடனடியாக வெளியிடு, இலங்கை அரசே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சர்வதேச சட்டங்களை ஏற்றுக்கொள், அரசியல் கைதிகளை விடுதலை செய், போன்ற பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர்பில் பொறுப்புக் கூறலுக்கு இலங்கை அரசுக்கு ஐநா வே மேலும் கால அவகாசம் வழங்காதே, என வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் படங்களையும் கையில் ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.