துணுக்காயில் இருந்து அக்கராயன் வரை 5ஆண்டுகளாக பஸ் தரிப்பதில்லை

முல்லைத்தீவு, துணுக்காயில் இருந்து அக்கராயன் வரை பஸ் சேவையினை நடத்துமாறு, போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள கிராமங்களின் மக்கள், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ,அக்கராயனில் தனியார் பஸ் தரித்துச் செல்ல முடியாது என கிளிநொச்சி தனியார் பஸ் சங்கத்தினர் அறிவித்த நிலையில், துணுக்காயில் இருந்து அக்கராயன் வழியாக யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற தனியார் பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டது.

ஐந்தாண்டுகளுக்கு மேலாக, மேற்படி வழித்தடத்தில் பஸ்கள் பயணிக்காததன் காரணமாக அம்பலப்பெருமாள்குளம், கோட்டைக்கட்டியகுளம், தென்னியங்குளம், உயிலங்கும், ஆலங்குளம் ஆகிய கிராமங்களின் மக்கள் போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.

அவசர தேவைக்காக மல்லாவி ஆதார மருத்துவமனை, அக்கராயன் பிரதேச மருத்துவமனை என்பவற்றிற்கு மக்கள் செல்வதிலும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.

மல்லாவி மத்திய கல்லூரி, அக்கராயன் மகா வித்தியாலயத்துக்குச் செல்லும் மாணவர்களும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர், துணுக்காய் ஆரோக்கியபுரம் கிராமத்துக்கு வந்த வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவரிடம் கோரிக்கை விடுத்த போதும், இதுவரை பஸ் சேவை இடம்பெறவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

You might also like