பளை மத்திய கல்லூரி இல்ல அலங்கரிப்பு! பொலிசாரும் புலனாய்வாளர்களும் விசாரணை

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டியின் போது இல்ல அலங்கரிப்பு தொடர்பில் பளைப்பொலிசாரும் புலனாய்வாளர்களும் துருவித்துருவி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி அண்மையில் நடைபெற்றுள்ளது. இதன்போது மூன்று இல்லங்கள் தங்களுடைய இல்ல அலங்கரிப்புக்களை செய்து கொண்டன.

இதில் வள்ளுவர் இல்லம் வடக்கு கிழக்கில் தமிழர்கள் தங்களுடைய கலை, கலாச்சார விழுமியங்களோடு செறிந்து வாழும் இலங்கையின் மாவட்டங்களை அடையாளமாகக் கொண்ட இல்ல அலங்கரிப்பை செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் பாடசாலைகளுக்கும் இல்ல பொறுப்பான மாணவர்களினதும் வீடுகளுக்கு சென்று பளைப்பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப்பிரிவு பொலிசார் மாணவர்களையும் இல்லப்பொறுப்பாசிரியர் ஆகியோரையும் துருவித்துருவி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த வாரம் குறித்த பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி அழைப்பிதழ் ஒன்றினை பாடசாலைக்குக் கொண்டு சென்ற பளைப்பொலிசார் குறித்த இல்லத்தின் பொறுப்பாசிரியர், விளையாட்டுக்குழு ஆசிரியர்கள், இல்லத்திற்கு பொறுப்பான மாணவர்களின் பெயர் விபரங்களை பதிவுசெய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை குறித்த இல்லத்தில் இல்ல அலங்கரிப்பு செய்து கொண்டமை தொடர்பிலும் அதனை அலங்கரித்தவர்கள் தொடர்பிலும் மாணவர்களின் வீடுகளுக்கு சென்ற பளைப்பொலிசாரும் இராணுவப்புலனாய்வாளர்களும் துருவித்துருவி விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், மாணவர்களையும் அச்சுறுத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக ஆசிரியர்களையும் மாணவர்களையும் பொலிசார் அச்சுறுத்தும் பாணியில் விசாரித்து வருவதனால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்வதனால் தாங்கள் தற்கொலை செய்யும் நிலை காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like