முகமாலையில் வெடிபொருட்களை அகற்றுவதில் பாரிய சவால்

கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் வெடிபொருட்களை அகற்றுவதில் பாரிய சவால்களை எதிர்கொள்வதாக கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினால் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின் பின்னர் இதுவரை மீள்குடியமர்விற்கு அனுமதிக்கப்படாத பகுதியாகவும் அதிகளவு வெடிபொருள் ஆபத்தான பகுதியாகவும் கிளிநொச்சி முகமாலைப்பகுதி காணப்படுகின்றது.

அதாவது கடந்த கால யுத்தத்தின் போது அதிளவான வெடிபொருட்கள் புதைக்கப்பட்ட பகுதியாகவும் இரு தரப்புக்களும் தொடர்ச்சியாக யுத்தத்தில் ஈடுபட்ட பகுதியாகவும் காணப்படும் இப்பகுதியில் வகை தொகையின்றி வெடிபொருட்கள் புதைக்கப்பட்டுள்ளதுடன் நீண்ட காலம் காத்திருந்து உயிர்களை காவு கொள்ளும்ஆபத்தான பகுதியாகவும் காணப்படுகின்றது.

கடந்த 2000ம் ஆண்டு காலப்பகுதியிலும் அதன் பின்னர் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2008 டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியிலும் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தப்புக்களும் பரஸ்பரம் மோதிக்கொண்ட பகுதியாகக் காணப்படுகின்றது.

கிளிநொச்சி, கிளாலி முதல் யாழ் வடமராட்சி, கிழக்குநாகர் கோவில் வரைக்குமான ஏறத்தாள ஏழு கிலோ மீற்றர் நீளமான பகுதிகளில் அதிகளவான நிலக்கண்ணி வெடிகளும் ஆபத்தான வெடிபொருட்களும் புதைக்கப்பட்ட பகுதியாகவும் தினமும் இரு தரப்புக்களும் மோதிக்கொள்ளும் பகுதியுமாக காணப்பட்டன.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் இங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட போதும் மேலும் பலபகுதிகள் இன்றும் ஆபத்தான பகுதியாகவே காணப்படுகின்றன.

இதில் வெடிபொருள்களை அகற்றிவரும் மனித நேயக்கண்ணி வெடி அகற்றும் அமைப்பான டாஸ் நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதி ஒருவர் கருத்துத் தெரிக்கும் போது,

இப்பகுதியில் அதிகளவான நிலக்கண்ணிவெடிகள் வாகன கண்ணி வெடிகள் என்பன மிகவும் ஆபத்தான நிலையில் புதைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வெடிக்காத நிலையில் காணப்படுகின்ற வெடிபொருட்களும் அதிகளவில் காணப்படுகின்றன. இராணுவ மண் அணைகள் கைவிடப்பட்ட காவலரண்களுக்கு அருகில் மிக ஆபத்தான வகையில் இந்த வெடிபொருட்கள் விதைக்கப்பட்டுள்ளன.

இதனை அகற்றுவதில் பாரிய சவால்கள் காணப்படுகின்றன எனவும் இவ்வாறான பகுதிகளுக்குள் பொதுமக்கள் பலர் நுழைந்து உயிரிழப்புக்கள் மறறும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

You might also like