அயல் நாடு வீடா விடுதியா? சிந்திக்க வைக்கும் தீர்க்க தரிசன கவியில் தமிழர்கள்

எப்போதோ கேட்ட கவியொன்று இன்று நினைவில் வருகின்றது. கவிகளையும், இலக்கியப் புராணங்களையும் மீட்டிப் பார்க்க வைப்பதில் இலங்கைத் தமிழர் கெட்டிக்காரர்கள் தான்.

போராட்டமே வாழ்க்கையாகிப் போகின்றது தமிழர் தம் வாழ்வு. இதற்கு காரணம் எது வென கண்டு பிடிக்கும் முன்னரே வாழ்க்கை முடிந்து போய் விடும் போல. கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்தை பார்க்கும் போது தீர்க்கக் கவியாக நினைவு வருகின்றது.

இப்போதைய தமிழர் நிலையை அப்போதே வடித்தான் தமிழ்க்கவி பாரதி. அன்று பாரதி வடித்த காணி நிலம் பராசக்தி எனும் கவிதை இன்றைய தமிழர் போராட்டத்தை நினைவு படுத்துகின்றது.

தமிழ்க் கவிகள் தீர்க்கதரிசிகள் என்ற கூற்றை மெய்யாக்கியது பாரதி எனும் புரட்சிக் கவியின் சொற்கள்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்

காணி நிலம் வசதி என்றாலே சொந்தமாய் ஒரு நிலம் இருப்பது. காணி இருந்தால் அது போதாது சொந்தமாக இருக்கவேண்டும் அதுவும் தன் வசம் இருக்க வேண்டும்.

சொந்தக் காணிகள் அந்நியர் வசம் இருக்கும் போது பூர்வீக சொத்தில் கால் பதிக்க முடியாதா? இறக்கும் முன்னர் தன் சொந்தக் காணியில் குடியேருவோமா?

என போராடும் மக்களின் போராட்டம் விடும் கண்ணீர். துடிக்கும் இதயத்தை கொஞ்சம் மெதுவாக அல்லது வேகமாகவே துடிக்க வைக்கும்.

அங்குத் தூணில் அழகியதாய் நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய்

அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும்

காணி மட்டும் போதாது பராசக்தி அழகிய தூய மாளிகை வேண்டும். மாட மாளிகை அல்ல ஓர் வீடு. திருத்தம் இங்கு கொடுக்கப்படுவது பொருத்து வீடுகள் காற்றடித்தால் காணாமல் போகும் என்கின்றனர் வீடு கிடைத்து விரக்தியடைந்த மக்கள்.

சொந்தக் காணியே கொடுக்கப்பட வில்லை அதில் யார் மாளிகை கட்டிக் கொடுக்கப்போவது. நம்பிப் பயன் இல்லை பாராசக்தியிடம் கையேந்துவோம். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை.

அங்குக் கேணியருகினிலே தென்னைமரம் கீற்று மிளநீறும்

பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கதிலே வேணும்

வடக்கிற்கு தென்னைகள் மட்டுமல்ல பனைகளும் மிக்க இயற்கைச் சூழல் இல்லாமல் மாளிகை மட்டுமல்ல குடிசையும் வேண்டாம். அதற்கு தானே வேண்டும் எங்கள் காணிகள் என கேட்கின்றனர் காணி உரிமையாளர்கள்.

இந்த தென்னையை பனையாய் சித்தரிப்போம். அவை இயற்கை விசிறிகள் அங்கே அமர்ந்தால் தெரியும் காற்று தனக்கே காற்று வீசிக் கொள்வது.

அதன் சுகம் அங்கே இருப்பவருக்கு மட்டுமே தெரியும். அதனைத் தானே கேட்கின்றார்கள். பத்து பன்னிரண்டு தென்னைகளை ஆனால் அவை சொந்தக் காணிகளாக இருக்க வேண்டும்.

நல்ல முத்துச் சுடர்போலே நிலாவொளி முன்பு வரவேணும்

அங்குக் கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்

பூமியைத் தாண்டி இப்போது வானம். சொந்தக் காணி, அழகிய வீடு சுற்றிலும் இயற்கைச் சூழல், வருடும் காற்று அத்தோடு நிலாவைப் பார்க்க வெளியே வரவேண்டும்.

அந்த அமைதி குளிர் அறையில் ஒய்யாரமாய் இருக்கும் அரசியல் வாதிகளுக்கு எட்டாக் கனி அதனாலேயே. மக்களுக்கு தன் காணியும் கானல் கனியாகி விட்டது.

கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும், இங்கு குயிலை அழைக்க வில்லை தன் காதல் துணையை அழைக்கின்றான் பாரதி.

என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல் வரவேணும்

பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்

இவை மட்டும் போதாது சித்தம் தனிந்திடத் தென்றல் வரவேண்டும். தென்னையும் தென்றலும் போதுமா? கொதிப்பவன் குளிரவேண்டுமே அவன் உரிமை கைவர வேண்டும். அத்தோடு பத்தினிப் பெண் வேண்டும்.

தன்மீது மட்டும் காதல் கொள்ளும் ஓர் பெண்ணே பத்தினிப் பெண். கற்பில் மட்டுமல்ல காதலிலும் பத்தினிப் பெண் வேண்டும் எனக் கவிப் படைத்தான் பாரதி. இது இன்றைய நிலையில் வடக்கைப் பெறுத்த வரை மாறி விட்டது.

பத்தினிகளை கூறு போடும் சமூதாயத்தை திட்டம் தீட்டி உருவாக்கப்படுகின்றார்கள். இது அறிந்ததாலோ தெரியவில்லை அன்றே பாரதி கேட்டு விட்டான் பத்தினிகளை விட்டு விடுங்கள் சிதைக்காதீர்கள் என்று.

எங்கள் கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தரவேணும்

அந்தக் காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுறவேணும்

என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித் திடவேணும்

கூட்டாக இவற்றை ரசிக்க வேண்டும் அவை மகிழ் கவிகள் தரவேண்டும். காடு வேண்டும், இயற்கை வேண்டும், தென்றல் வேண்டும், கேடு கெட்ட சமுதாயம் வேண்டாம் அப்போது ஒற்றுமையாக இருந்த காட்டு வாழ்க்கை போதும்.

கிடைக்காத இவை சில வேளை கிடைத்து விட்டால் என்ன செய்வது எவரையுமே நம்ப முடியாது. சுற்றிலும் காட்டிக் கொடுப்புகள் இவையனைத்தையும் காக்க பாராசக்தியே நீயே காவல் தர வேண்டும்.

அருமையான சொந்த நிலம், அங்கு அழகான வீடு, தென்னை தென்றலின் இதம், கேணி கொடுக்கும் ஊற்று, நட்சத்திரங்கள் சிரிக்க நிலவு ஒளி, கூவும் குயில், எழும் கொதிப்பைச் சீராக்கத் தென்றல், அருகில் பத்தினிப் பெண், பொங்கும் கவிதைகள், பொறாமை உலகினை காக்க பராசக்தி.,

இத்தனையும் வேண்டிய படி கிடைத்தால் சுகம் தலையேற நிலைமாறி தடம் மாறிப்போக மாட்டோம் அதுதான் என் மூச்சு, சொந்தக் காணி அதுதான் என் வாழ்க்கை அதுதான் என் உயிர் என்றான் பாரதி அப்போதே.

வடுக்களும் காயங்களும் மறைய இனியாவது சொந்தக் குழந்தைகளை திறன் பட வளர்க்க, சுயத்தோடு வளர்க்க சொந்தக் காணிகளைத் தாருங்கள் கேட்டு இன்றும் போராடும் மக்கள்.

அவர்களோடு சேர்ந்து மழலைகளும் போராட்ட களத்தில். என்று தீரும் இந்த அவலம், தீர்க்கப்படுமா? அல்லது தொடரப்படுமா அரசியல் தலைமைகள் வந்து பதில் தரவேண்டும்.

அயல் நாடுகளுக்கு சென்று வாழ்ந்தாலும் அது அவர்கள் வீடு அல்ல விடுதி மட்டுமே. சொந்த இடங்களில் தங்கள் உயிரற்ற உடலாவது புதைக்கப்பட வேண்டும் என்பது தமிழர்கள் வரமாக பார்க்கும் ஒன்று.

இது காணிகள் கேட்டு போராடும் மக்களின் மண் ஆசை அல்ல, அவர்களின் உயிர், உரிமைத் தேடல். அதனை தீர்க்க வேண்டியது அரசியல் தலைவர்களின் கடமை.

You might also like