கிளிநொச்சியில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் எனவும், இலங்கை அரசுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஐ.நா கால அவகாசம் வழங்கும் விடயத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணங்கிப்போக இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

எனவே இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களின் உணர்வுகளுக்கு புறம்பாக செயற்படக் கூடாது என்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு கடந்த தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் காணிகள், அரசியல் கைதிகள் விடயங்களை முதன்மைப் படுத்தி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கோரியிருந்தனர்.

இதன் காரணமாக மக்களும் அதற்கான ஆணையை வழங்கியிருந்தார்கள். ஆனால் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகள் அதற்கு மாறாக செயற்படுகின்றனர் என்றும் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் சுழற்சி முறையில் தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் இம்மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like