ஆனையிறவு மக்களுடனான விசேட சந்திப்பை மேற்கொண்ட டெனிஸ்வரன் (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆனையிறவு கிராமத்தில் வசித்துவரும் மக்களை அவர்களது சன சமூக நிலையத்தில், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் சந்தித்து அவர்களது குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பான ஒரு விசேட கலந்துரையாடல் 20/02/2017 திங்கள் மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த விசேட கலந்துரையாடலில் அங்கு வசித்துவரும் குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாக அதாவது அவர்களது கிராமத்திற்கான பாதைகளில் இரவுவேளைகளில் பயணிக்கும்போது விஷப்பாம்பு பூச்க்களுக்குள் பயத்தோடு பயணிப்பதாகவும் அதனை நிவர்த்தி செய்ய தெரு விளக்குகள் பொருத்தி தருமாறும், அத்தோடு அவர்களது பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதற்க்கோ அல்லது தாங்கள் ஒரு அலுவலுக்காக கிளிநொச்சி செல்வதற்க்கோ இவ்வீதியில் வெயிலில் நிற்பதாகவும் அதற்கு ஒரு பேரூந்து நிறுத்தகம் அமைத்து தருமாறும், அதேவேளை பாரிய பிரச்சினையாக அவ்வாறு வெய்யிலில் நின்றாலும் அவ்வழியாக செல்லும் எந்த பேருந்துகளும் மறித்தாலும் தங்களை ஏறிச்செல்லாததால் மிகுந்த சிரமப்படுவதாகவும் அந்த வகையில் போக்குவரத்து பிரச்சினைக்கு தமக்கு ஒரு நிரந்தர தீர்வு வழங்குமாறும் இவ்வாறு பலதரப்பட்ட தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சருடன் கலந்துரையாடினார்கள்.

அவ் விசேட சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களும் கண்டாவளை பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் பூ.ராஜ்வினோத் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

அங்கு மக்கள் தெரிவித்த குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் பதில் அளிக்கையில்  தெருவிளக்குகளுக்கான ஒழுங்குகளை தாம் செய்துதருவதாகவும் அவற்றை இலங்கை மின்சார சபையின் உதவியுடன் பொருத்தி தருவதாகவும் கூறினார், அதனைத்தொடர்ந்து அவர்களது வாழ்வாதாரம் தொடர்பாகவும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் தொடர்பாகவும் கேட்டுக்கொண்டதோடு அனைத்து குறைபாடுகளையும் உரியமுறையில் தங்களது கடிதத்தலைப்பில் தனக்கு தருமாறும், இந்த ஆண்டிற்கான பேரூந்து நிழல்குடைகள் அமைப்பதற்கான ஒதுக்கீடுகள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டில் அந்த குறைபாட்டை தாம் நிவர்த்தி செய்துதருவதாகவும், பேரூந்துகள் நிறுத்தாமல் செல்வது தொடர்பாக தாம் குறித்த பேரூந்து சேவை வழங்குநர்களுக்கு அறிவுறுத்துவதாகவும் இவ்விடயம் தொடர்பாக இருதரப்பு பேரூந்து சேவை வழங்குநர்களும் கவனத்தில் கொண்டு செயற்படுமாறும் அவ்வாறு பேரூந்துகள் தொடர்ந்து கண்மூடித்தனமாக இவ்வாறு செயற்படுவார்களாயின் குறித்த உள்ளூர் சேவைகளை வழங்கும் பேரூந்து நடத்துநர் மற்றும் சேவை வழங்குநர்கள் மீது எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களுக்கு தெரிவித்தார்.

You might also like