கிளிநொச்சியில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணக் கொடுப்பனவு பணி ஆரம்பம்

கிளிநொச்சியில் தற்போது நிலவிவரும் வறட்சியின் பாதிப்புகள் மற்றும் நிவாரணக் கொடுப்பனவுகளுக்கான பதிவுகளை மேற்கொள்வதற்கான பணிகளை ஆரம்பிக்குமாறு கிளிநொச்சி அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி செயலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயம் அல்லது அதனை அண்டிய தொழில்களில் ஈடுபடும் மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் நோக்குடன் குறித்த பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளது

மேலும் வறட்சியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளுமாறும் இப்பதிவுகளை மேற்கொள்ள கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரையும், இவ்விடயத்துடன் தொடர்புபட்ட திணைக்களங்களின் உதவியினை பெற்றுக் கொள்ளுமாறும் அரச அதிபரால் கோரப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், கமநல சேவை உதவி ஆணையாளர், கடல் வள நீரியல் திணைக்கள உதவிப் பணிப்பாளர் மற்றும் ஏனைய திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like