காலக்கெடு எங்களுக்குத் தேவையில்லை : பதிலை நல்லாட்சி அரசு தரவேண்டும்
காலக்கெடு எங்களுக்குத் தேவையில்லை. கையால் படையினரிடம் ஒப்படைத்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளினுடைய பதிலை நல்லாட்சி அரசு தரவேண்டும்.
அதுவரை எமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குறிப்பிட்டுள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாக மேற்கொண்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் நான்காவது நாளாக இன்று (23) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களுக்கான உரிய பதிலை இந்த அரசு வழங்கவேண்டுமெனக்கோரி கிளிநொச்சி கந்தசுவாமி முன்றலில் கடந்த திங்கட் கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் நான்காவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டத்திற்கு சிவில் அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டு இயக்கங்கள் தமது ஆதரவுகளை இன்றும் வழங்கிவருகின்றன.
இந்த நல்லாட்சி அரசு இனியும் காலக்கெடு விதிக்கக்கூடாது எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற பதிலைக் கூறவேண்டும்.
இதற்கு சர்வதேசமும் இலங்கை அரசுக்கும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனத்தெரிவித்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஐ.நா செயலாளருக்கான மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர்.
இந்த நிலையில் நான்காவது நாளாகத் தொடரும் இப்போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
காலக்கெடுக்கள் விதிக்காது எங்கள் கைகளால் இராணுவத்திடம் ஒப்படைத்த மற்றும் கடத்தப்பட்ட எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற பதிலை இந்த நல்லாட்சி அரசு கூறவேண்டும்.
சிறைகளில் தடுத்துவைத்திருக்கின்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும். யுத்த முடிந்தும் எட்டு ஆண்டுகளாகி விட்டது.
ஆனால் நல்லாட்சி என்று சொல்லுகின்றார்கள் எங்களுடைய உறவுகளைத்தேடி அவர்களுக்கான பதிலைத்தேடி நாங்கள் உணவு, உறக்கமின்றி தெருவிலே நிற்கின்றோம்.
இதுதானா நல்லாட்சி? காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கு சரியான பதிலை இந்த நல்லாட்சி அரசு கூறவேண்டும்.
அதுவரை எங்களுடைய இந்தப்போராட்டத்தை நாங்கள் கைவிடப்போவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.