கிளிநொச்சி “TNA” அலுவலகத்தில் வெடிகுண்டு? இறுதித் தீர்பில் மன்னிப்பு கோரிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர்

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் வெடிகுண்டு மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகக் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளின் இறுதித் தீர்ப்பில் பயங்கரவாத தடுப்பு பொலிசார் குறித்த கைது தொடர்பில் மன்னிப்புக் கோரியுள்ளனர்.

குறித்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் வெடிகுண்டு மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகக் கைது செய்யப்பட்டு 13 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அருணாசலம் வேழமாலிகிதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அப்போதைய பிரத்தியேகச் செயலாளராக இருந்த பொன்னம்பலம் லக்ஷமிகாந்தன் ஆகியோரது வழக்கு விசாரணைகளின் இறுதித் தீர்ப்பு இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமானஅறிவகத்திற்கு கொழும்பிலிருந்து சென்ற பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர்அலுவலகக் கடமையில் இருந்த அ.வேழமாலிகிதனை உடனடியாகவே கைது செய்து தமதுவாகனத்துள் தடுத்து வைத்து விட்டு, அலுவலகப்பணியாளர்கள் அனைவரையும் அப்படியே அலுவலகத்தின் முன்பக்கத்தில் கொண்டு வந்து இருத்தி அசையக்கூடாது எனக்கூறிவிட்டு ஆயுதம் தாங்கிய படையினரும் பொலிசாரும் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப்பிரிவினரும் இணைந்து அலுவலகத்தில் தேடுதல் நடத்துவதாகக் கூறி சல்லடைபோட்டுத்தேடுதல் நடத்தினர்.

அதன் பின்னர் அங்குள்ள அறையொன்றிலிருந்து சொப்பிங் பாக்கினுள் வெடிமருந்து இருப்பதாகக் குறிப்பிட்டு அதனை அங்கிருந்தவர்களுக்குக் காண்பித்து அலுவலகத்தை மூடி மீண்டும் தேடுதல் நடத்தி அன்றைய தினம் இரவு 7.30 மணியளவில் அங்கிருந்ததாக கூறப்பட்ட சிறிதளவு வெடிமருந்தையும் எடுத்துக் கொண்டு கைது செய்து தடுத்து வைத்திருந்த வேழமாலிகிதனையும் கூட்டிச் சென்று கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைத்திருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அப்போதைய பிரத்தியேகச் செயலாளர் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கொழும்புக்குச் சென்ற போது அவரையும் அங்கு வைத்துக் கைது செய்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இருவரையும் 13 மாதங்களாக பயங்கரவாதக்குற்றத் தடுப்புப் பிரிவினரின் சிறையில் தடுத்து வைத்து விசாரித்துள்ளார்கள்.

பின்னர் இருவர் மீதுமுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்குத் தகுந்த ஆதாரங்கள், காரணங்கள் காணப்படாதமையால் இருவரும் 09.01.2014 அன்றைய தினம் நீதிமன்றத்தின் மூலம் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இதனையடுத்து குறித்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்று நீதிபதிகளினதும் முன்னிலையில் பயங்கரவாதப் பிரிவுப் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கோரியுள்ளனர்.

இதன் போது குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பாக முதலாவது நபரான அ.வேழமாலிகிதன் சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார். எனினும் வழக்கில் இரண்டாவது நபர் மன்றில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like