படைத்தரப்பின் வாக்குறுதியை புறந்தள்ளி ஐந்தாவது நாளாக தொடரும் பரவிப்பாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்
பொதுமக்களுக்கு சொந்தமான 9.5 ஏக்கர் காணிகளில், ஒரு பகுதி காணிகளை விடுவிக்க படைத்தரப்பு இணக்கம் தெரிவித்துள்ள போதிலும், பரவிப்பாஞ்சான் மக்களுடைய கவனயீர்ப்புப் போராட்டம் ஐந்தாவது நாளாகவும் இன்று தொடர்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்களது காணிகளுக்குள் சென்று இருக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் குறித்த பகுதிக்கு இராணுவ உயரதிகாரிகள், கரைச்சி பிரதேச செயலாளர், கோ.நாகேஸ்வரன் மற்றும் காணிவெளிக்கள உத்தியோகத்தர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
மேலும், இராணுவத்தினரின் பயன்பாட்டிலுள்ள அவர்களது காணிகளை பார்வையிடுவதற்காக அழைத்துச் சென்றதுடன், நீண்ட நேரம் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.
இதன்போது காணிகளை அடையாளம் காட்டிய மக்கள் காணியை விரைந்து விடுவித்து தருமாறு கோரியிருந்தனர்.
இதனையடுத்து இராணுவத்தினர், ஒருசில காணிகளை தவிர ஏனைய காணிகளை விடுவிப்பதற்கு பிரதேச செயலாளர் மக்களின் காணிகளை அடையாளப்படுத்தியதன் பின்னர் தாம் மிக விரைவாக வெளியேறி மக்களிடம் காணிகளை கையளிப்பதாக தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் போராட்டகாரர்கள், எங்களுடைய காணிகளுக்குள் சென்று இருக்கும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று தெரிவித்து தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.