கிளிநொச்சி மாவட்டத்தில் மேய்ச்சல் தரவைகள் இன்மையால் சிரமத்தில் கால்நடைப் பண்ணையாளர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் இன்றி கால்நடைப் பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் மிக முக்கிய வாழ்வாதாரமாக் கொண்ட மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளும், ஏழாயிரம் வரையான ஆடுகள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட எருமை மாடுகளும், காணப்படுகின்றன.

இந்நிலையில் கால் நடைகளை பயிர் செய்கை காலங்களில் வைத்துப்பராமரிக்கக் கூடிய மேய்ச்சல் தரவைகள் இல்லாத நிலையில் பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளக வளர்ப்பு முறைகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றபோதும் தொண்ணூறு வீதமான கால்நடைப்பண்ணையாளர்கள் திறந்தவெளி மேய்ச்சல் தரவைகளில் வைத்தே கால்நடைகளை பராமரித்து வருகின்றனர்.

இதுவே பண்ணையாளர்களுக்கு இலாபம் கூடிய வளர்ப்பு முறையாகவும் தற்போது அமைந்துள்ளது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் மேய்ச்சல் தரவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் பயிர் செய்கை நிலங்களாகவும் குடியிருப்பு நிலங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் தலா நூறு ஏக்கர் வரையில் மேய்ச்சல் தரவைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் எனவும் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like