தமிழ் மக்கள் மிகவும் நிதானமாக சிந்திக்க வேண்டிய நேரமிது!

தமிழ் மக்கள் தற்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்குள் ஆளாகியுள்ளனர்.

அடுத்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடர் இடம்பெற இருக்கின்ற நிலையில்,ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தினால் ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசு நிறைவேற்றத் தவறியுள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசுக்கு ஜெனிவாவில் மேலும் கால அவகாசம் வழங்கப்படக் கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான காலஅவகாசம் வழங்கப்படுமாயின் அது தமிழ் மக்களுக்கு மிகவும் பாதகமாக அமையும் என்பது நிறுதிட்டமான உண்மை.

எது எவ்வாறாயினும் இலங்கை அரசுக்கு ஜெனிவா வழங்கக்கூடிய காலஅவகாசம் தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு.

இருந்தும் இது தொடர்பில் கூட்டமைப்பு மெளனம் சாதிப்பதை அவதானிக்க முடிகிறது.

தவிர, 2016 டிசம்பர் மாதத்துக்குள் இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று உறுதி மொழி தந்த கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் அதில் இருந்து மெல்ல நழுவிக் கொண்டார்.

எனினும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விரைவில் கிடைத்து விடும் என்ற உறுதிமொழியைத் தருவதில் அவர் இம்மியும் பின்னிற்கவில்லை.

நிலைமை இதுவாக இருக்கையில், புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் இப்போதைக்கு வெளிவரும் போலத் தெரியவில்லை.

ஆயினும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் வெளிவந்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைத்து விடும் என்று சாரப்படவே இரா. சம்பந்தரின் கருத்துக்கள் இன்று வரை இருந்து வருகிறது.

எது எவ்வாறாயினும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதற்கான ஒரு சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இச்சூழ்நிலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைமையும் காரணமாக இருக்கிறதோ என்று ஆராய்வது கட்டாயமானது.

இலங்கை அரசு மட்டுமே எங்களை ஏமாற்றுகிறது என்ற நிலையை சற்று அகலப்படுத்தினால், தமிழ் அரசியல் தலைமையும் எங்களை ஏமாற்றுகிறது என்ற நிஜம் தெரியவரும்.

இலங்கை அரசுடன் அவர்களுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.

அவர்கள் இலங்கை அரசைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்துகின்றனரே தவிர,தமிழ் மக்களின் உரிமை என்ற விடயம் இவர்களுக்கு இரண்டாம் நிலையிலேயே உள்ளது என்ற உண்மைகளையும் அறிய முடியும்.

இந்நிலையில் தமிழினத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் நியாயபூர்வமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்.

அவர் முன்வைக்கின்ற கருத்துக்கள் தொடர்பில் தமிழ் மக்கள் நிதானமாக கவனம் செலுத்த வேண்டும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்துக்களை கூட்டமைப்பின் தலைமை, பாராளுமன்றத்தில் விமர்சிக்கிறது.

ஆனால் அந்த விமர்சனம் என்பது தேர்தலின் வெற்றி தோல்வியை முன்வைப்பதாக இருக்கிறதேயன்றி நியாயபூர்வமான கருத்துக்களாக இல்லை.

இவ்வாறாக கூட்டமைப்பின் தலைமை விமர்சனம் செய்வது தமிழ் மக்களுக்கு ஏற்படப் போகின்ற ஆபத்தைத் தடுப்பதாக இருக்காது.

ஆகையால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்துக்கள் தொடர்பில் கூட்டமைப்பும் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் பாவப்பட்டவர்கள் என்று சொல்வதைத் தவிர வேறு எதுவுமிருக்காது.

You might also like