சாந்தன் காலமானார்: யாழ்.வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக அறிவித்தது (3ஆம் இணைப்பு)

ஈழத்தின் புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் மரணமடைந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
சாந்தன் இன்று காலை மரணமாகியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், பின்னர் அவருக்கு நாடித் துடிப்பு காணப்படுவதாகவும் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், அவர் சற்றுமுன் இயற்கை எய்திவிட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சாந்தன் மரணிக்கவில்லை! – உடல்நிலை மோசமடைந்துள்ளது (2ஆம் இணைப்பு)
விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத் தளங்களில் வெளியாகியிருந்த செய்திகள் தவறானவை என யாழ். பிராந்திய செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்ற போராடி வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் காலமானார்?
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்ச்சிபூர்வமாக எழுச்சியுடன் தமது கம்பீரமான குரலில் பாடி ஈழத்தில் மட்டுமன்றி உலகில் தமிழர்கள் விரவி வாழும் சகல பிரதேசங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டிருந்த புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் இவ்வுலகை விட்டுச் சென்றுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியுள்ளது.
தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்ததோடு, இருதய நோயாலும் நீண்டகாலமாக அவதியுற்று வந்திருந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.போதான வைத்தியசாலையில் அவர் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர் என்று குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தையும் உண்மைத் தன்மையையும் உணர்ச்சி ததும்ப வெளிக்கொணர்ந்த பெருமை சாந்தனையே சாரும். இதற்கென, விடுதலைப் புலிகளின் தலைவரால் பலமுறை கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=W8HeHeBH1E4