இலட்சியப் பாதைக்கு இசையால் பலம் சேர்த்தவர் எஸ்.ஜீ.சாந்தன்! சிறீதரன் எம்.பி. புகழாரம்

சுதந்திரம் நோக்கிய தமிழர்களின் விடுதலைப் பயணத்தில் மக்களை இசையால் வசமாக்கி விடுதலை பண்பாடிய மாமனிதர் எஸ்.ஜீ.சாந்தன் அவர்களின் மறைவுத் துயரில் எமது மக்களுடன் நானும் பங்குகொள்கிறேன்.

எமது விடுதலைப் போராட்டம் பன்முகப் பார்வைகளுடன் தாயகத்தில் வியாபித்திருந்த போது இசைவழியில் விடுதலைக்கு பணியாற்றிய எஸ்.ஜீ. சாந்தன் அவர்களது இழப்பு எமது இனத்திற்கு பேரிழப்பாகும்.

போராட்ட வரலாற்றில் என்றும் அழிக்க முடியாத பதிவு சாந்தன் அவர்களுடையது. ஒரு இசைக் கலைஞனாக மாத்திரமன்றி கலைத்துறையின் அத்தனை வடிவங்களூடாகவும் அவரின் ஆற்றல்கள் பரிணமித்திருந்தன.

அழகுணர்வும் வசீகரமும் ஜனரஞ்சகமும் கலைப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்ற கலைஞானியாக சாந்தன் திகழ்ந்தார்.

இசையால் எமது இலட்சியப் பாதைக்கு உரமூட்டிய சாந்தன் தனது புதல்வர்களையும் இந்த மண்ணின் விடுதலைக்காக ஆகுதியாக்கிய வீரத்தந்தை.

“இந்த மண் எங்களின் சொந்த மண்” என்று தன் புரட்சிக் குரலால் தமிழர்களின் தன்மான உணர்வை எழுச்சி பெறச்செய்த நாள் முதலாய் அவர் விடுதலைக்காய் ஆற்றிய பணிகள் மகத்தானவை.

ஈழத்து இசை வரலாற்றை தென்னிந்திய இசையுலகுக்கு நிகராக வளர்த்தெடுப்பதிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் கலைத்துறையினரோடு சாந்தன் இணைந்து ஆற்றிய பணிகள் அற்புதமானவை.

விடுதலைப் போராட்ட தலைமையையும் மக்களையும் மானசீகமாக நேசித்து அவர்கள் வரித்துக் கொண்ட இலட்சியப் பாதைக்கு இசையால் பலம் சேர்த்த எங்கள் தேசத்தின் கீதம் மாமனிதர் சாந்தன் அவர்களுக்கு எமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன்,

‘இந்த மண் எங்களின் சொந்தமண்ணாக’ மலர்கின்ற போது அவரது ஆத்மா ‘குயிலே பாடு…’ என இசைக்கட்டும் என அஞ்சலிக்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் தனது அஞ்சலிச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

You might also like