முள்ளிவாய்க்கால் இறுதியுத்த ஆவணப் படம் 18-05-2009 – திரை விமர்சனம்

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை துணிச்சலாக ஆவணப்படுத்தி இருக்கிறது ‘18.05.2009’ திரைப்படம்.

நடிகர்கள் – தன்யா, சுபாஷ் சந்திர போஸ், பிரபாகரன், நாகி நீடு, ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி உள்ளிட்ட பலர்,

தயாரிப்பு – குருநாத் சலசானி,
எழுத்து – இயக்கம்: கு.கணேசன்,
இசை – இசைஞானி இளையராஜா,
ஒளிப்பதிவு – பார்த்திபன், சுப்பிரமணியன்,
கலை இயக்கம் – பிரவீண்,
பாடல்கள் – மு.மேத்தா, பழனிபாரதி, நா.முத்துக்குமார்.

இலங்கையில் கடந்த 1983ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின் போது, பெற்றோரை இழக்கிறாள் ஆறு வயது சிறுமி தமிழ்ச்செல்வி(தன்யா). சித்தப்பா, சித்தியின் தயவில் பள்ளிப் படிப்பை தொடர்கிறாள். இசையிலும், தமிழிலும் அதீக திறமை கொண்ட செல்வியை, வெளிநாட்டுக்கு அனுப்ப நினைக்கிறார்கள் அவளது வளர்ப்பு பெற்றோர்கள். ஆனால் தன் தாய் நாட்டைவிட்டு வெளியேறமாட்டேன் என உறுதியாக நின்று, அங்கேயே படிப்பை முடிக்கிறாள். கல்லூரி விழாவின் போது நடைபெறும் ஒரு சம்பவத்தின் மூலம் இயக்கத்தின் (விடுதலை புலிகள்) மீது ஈர்க்கப்பட்டு, அதில் சேர நினைக்கிறாள்.

ஆனால் பிறப்பிலேயே இதயத்தில் ஓட்டை உள்ள பெண் என்பதால், உடல் நலன் கருதி இயக்கத்தார் அவளை ஊடகப்பிரிவில் பணியாற்ற அனுமதிக்கின்றனர். செய்தி வாசிப்பின் மூலம் தமது மக்களின் இன்னல்களை உலகுக்கு எடுத்துரைக்கிறாள் தமிழ்ச்செல்வி. இயக்கத்தை சேர்ந்த ஒருவர் தமிழ்ச்செல்வியை காதலிக்க, இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். குழந்தையும் பிறந்து வாழ்க்கை நிம்மதியாக சென்றுக் கொண்டிருக்க போர் உச்சம் கொள்கிறது.

இதனால், தங்கை, தாய் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை படகில் ஏற்றி வெளிநாட்டுக்கு அனுப்பும் தமிழ்செல்வி, தன்னுடைய குழந்தையுடன் இலங்கையிலேயே இருக்கிறார். போர் உச்சம் அடைந்ததால், குடிக்கத் தண்ணீர் இல்லை, குழந்தைக்கு கொடுக்க பால் பவுடர் கூட இல்லை என்ற நிலை உருவாகிறது. பசியில் குழந்தை இறந்துவிட, ஒரு போராளி பெற்றோராக அந்த துன்பத்தை கடக்கிறார்கள் தமிழ்செல்வியும், அவரது கணவரும்.

ஒரு கட்டத்தில் கணவரும் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழக்க, இலங்கை ராணுவத்திடம் சிக்கிக் கொள்கிறார். ராணுவத்தினர் அவரை நிர்வாணப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொல்கிறது. இது தான் நெஞ்சை உறையவைக்கும் ‘18.05.2009’ படத்தின் கதை.

இந்த படத்தை இயக்கி இருக்கும் கு.கணேசன், கர்நாடக மாநிலத்தில் பிறந்த தமிழர். ‘போராட்டக்களத்தில் ஒரு பூ’ என்ற படத்தை இயக்கி, பல பிரச்சினைகளை சந்தித்து, பிறகு ‘18.05.2009’ படத்தை எடுத்திருக்கிறார். லட்சக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட இலங்கை போரின் கொடூர முகம் காட்சிபடுத்தியதற்காகவே இயக்குனருக்கு பெரிய பாராட்டுக்கள். சென்சார் போர்ட் உள்ளிட்ட அமைப்புகள் ஏற்படுத்திய பிரச்சினைகளால், இலங்கை, பிரபாகரன், விடுதலை புலிகள் என்ற பெயர்களை எந்த இடத்திலும் அவரால் பயன்படுத்த முடியவில்லை. பாமர மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக, இலங்கை தமிழை தவிர்த்து, வழக்கமான தமிழ் வசனங்களே படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் ஈழத்தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளையும், துன்பங்களையும் ஆழமாக அவணப்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குனர். இலங்கை ராணுவத்தின் குண்டு மழையில் அப்பாவி தமிழர்கள் எப்படி பலியானார்கள் என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார் கு.கணேசன். ஆனால் வெட்கம் கெட்ட மூடர்கள் தான் ஒரு பெண் நிர்வாணப்படுத்தி, பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினார்கள் என்றால், நீங்களும் ஏன் அந்தக் காட்சிகளை அவ்வளவு நீளமாக வைக்க வேண்டும்? இது போன்ற காட்சிகளால் படத்தை பார்க்க பெரிய பொறுமை தேவைப்படுகிறது.

‘நம்மள ஏன் குண்டு போட்டு கொல்லாங்க’, ‘தமிழ்நாட்டு மக்கள் நம்மள காப்பாத்த வருவாங்கலா?’ போன்ற வசனங்கள் நம்முள் பல கேள்விகளை எழுப்புக்கின்றன. தமிழ்செல்வியாக நடித்திருக்கும் தன்யா, ஈழப்போரை முழுமையாக உள்வாங்கி நடித்திருக்கிறார். வாய் அசைவு மட்டும் தான் பிரச்சினை மற்றபடி பல காட்சிகளின் மூலம் நம்முள் சோகத்தை கடத்துகிறார். நிர்வாணமாக நடிக்கவும் ஒரு பெரிய துணிச்சல் வேண்டும். அந்த காட்சிகளில் அழமாக நடித்திருக்கிறார்.

இசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அற்புதம். அதுவும், எத்தனை எத்தனை கொடுமைகள் பாடல் நெஞ்சை கசக்கிப் பிழிகிறது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை, கிராபிக்ஸ், ஒலிக்கலவை என படத்தில் வேலை பார்த்த அனைவருமே ஒரு வரலாற்றை பதிவு செய்ய அபாரமாக உழைத்திருக்கிறார்கள்.

You might also like