கேப்பாபிலவு மக்களின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி: நாளை காணிவிடுவிப்பு

விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் நாளை விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்படி குறித்த காணிகள் நாளை காலை 11 மணியளவில் விடுவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் இன்று காலை படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகளை எல்லைப்படுத்தும் பணிகள் ஆரம்பமாகியிருந்தது.

இதேவேளை, படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்றுடன் 29 நாட்களாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பின் போது படையினர் வசமிந்த குறித்த காணிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்தெரிவித்திருந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like