கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு

விமானப்படையினரின் ஆக்கிரமிப்பில் காணப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் இன்று (புதன்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளன.

52 பேருக்குச் சொந்தமான சுமார் 40 ஏக்கர் காணிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமானப்படையினர் புதிதாக அமைத்துவரும் வேலிக்குள்ளும் பொதுமக்களின் காணிகள் காணப்படும் நிலையில், இக் காணிகள் தொடர்பில் இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

யுத்தம் நிறைவடைந்து 8 வருடங்கள் கடந்த பின்னரும் இம்மக்களின் காணிகள் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் காணப்பட்டு வந்த நிலையில், அவற்றை விடுவிக்குமாறு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தனர்.

இவற்றிற்கு எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில் பொறுமையிழந்த மக்கள், கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதிமுதல் கேப்பாப்பிலவு விமானப்படைத்தளத்தின் முன் கொட்டகை அமைத்து இரவு பகலாக போராடி வந்தனர்.

காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என மக்கள் உறுதியாக தெரிவித்திருந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் இவ்விடயம் நேற்று முன்தினம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.  இதனையடுத்து பாதுகாப்பு தரப்பிற்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புரையின் பிரகாரம் இன்றைய தினம் இம் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

பல வருடங்களுக்குப் பின்னர் தமது பூர்வீக மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ள மக்கள் தாம் வாழ்ந்த இடங்களை மகிழ்ச்சியுடன் பார்வையிட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like