யாழ். குடாநாட்டில் நூதன முறையில் திருட்டு: வர்த்தகர்கள் பலரும் பாதிப்பு

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக காரில் நடமாடும் நூதனத் திருடர்கள் வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கொள்வனவு செய்வது போன்று பாசாங்கு செய்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பல வர்தகர்கள் இது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளர்.

இந்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக காரில் நடமாடும் இரு தென்னிலங்கை இளைஞர்கள் நூதனத் திருட்டில் ஈடுபடுவதனால் பல வர்த்தகர்கள் தமது பணத்தினை இழந்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள் வர்த்தக நிலையங்களில் அதிக வாடிக்கையாளர்கள் இருக்கும் சமயமே இவ்வாறு மோசடியில் ஈடுபடுகின்றனர்.

இந்த இளைஞர்கள் வர்த்தக நிலையங்களிற்குச் சென்று 100 ரூபாவிற்கும் குறைவான பொருளைக் கொள்வனவு செய்கின்றனர்.

அதற்கான 2 ஆயிரம் ரூபா தாளினை வழங்கி மிகுதிப் பணத்தைப் பெறுகின்றனர். அதன் பிற்பாடு எம்மிடம் 100 ரூபா தாள் உள்ளது. எனவே, 2 ஆயிரம் ரூபா தாளைத் தாருங்கள் என மீண்டும் வர்த்தகரிடம் கோருகின்றனர்.

வர்த்தகர்கள் 2 ஆயிரம் ரூபா தாளை வழங்கி விட்டு முன்னர் வழங்கிய மீதியை தருமாறு கோரினால் மிகுதி பணம் வழங்கவில்லை என தெரிவித்து, வர்த்தகர்களுடன் தகராறில் ஈடுபட்டு பணத்தினை மீளப்பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான மோசடிக் கும்பல் யாழ் நகர், கந்தர்மடம், திருநெல்வெலி ஆகிய பகுதிகளுடன் சங்கானை, சித்தங்கேணியிலும் தமது கைவரிசைகளை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பணத்தை இழந்த வர்த்தகர்கள் வெட்கம் காரணமாக பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு அஞ்சுவதாகவும், தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கருதுவார்கள் எனவும் வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

You might also like