இஸ்லாமியருக்கு இந்து விவகார பிரதி அமைச்சா? – ப.உதயராசா

இன்றைய தினம் (12.06.2018) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கட்கு இந்து விவகார பிரதி அமைச்சு வழங்கப்பட்டதையடுத்து அதனை கண்டிக்கும் முகமாக ஸ்ரீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ப.உதயராசா ஊடகங்களிற்கு அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளார்.

இந்து பாரம்பரியத்தை அறியாதவர்களுக்கும் இந்துக்கள் தெய்வமாக வழிபடும் கோமாதாவை வெட்டி வியாபாரம் செய்யும் நபர்களுக்கும் இந்த பதவியை வழங்கியதென்பது இலங்கையில் வாழும் அனைத்து இந்து மக்களையும் இந்த நல்லாட்சி அரசு புறக்கணிப்பதாகவே கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது

கடந்த 2015 ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையான தமிழர்களின் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை சோசலிச குடியரசின் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை தமிழர்களின் பெருமதிப்பை பெற்றவர்.

ஆனால் இன்று இந்து விவகார பிரதி அமைச்சராக இஸ்லாமியர் ஒருவரை தெரிந்தெடுத்திருப்பது வேதனைக்குரிய விடயமென்பதுடன் இந்துக்கள் மத்தியில் பெரும் அவப்பெயரை ஜனாதிபதிக்கு எடுத்துக்கொடுத்துள்ளது. நாட்டின் தலைவர் இதனை சிந்திக்காமல் செய்துள்ளாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதேவேளை பெளத்த விவகார அமைச்சு அல்லது முஸ்லிம் விவகார அமைச்சுக்களை வேறு ஒரு இனத்தவருக்கு வழங்கியிருக்க முடியுமா? அல்லது அந்த இனத்தவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? தமிழர்கள் மீது மாத்திரம் இவ்வாறான செயற்பாடுகளை செய்வதால் நல்லாட்சி என கூறிய இந்த அரசும் தமிழர்கள் மீது தொடர்ந்து அடக்கு முறையை பிரயோகிப்பதாகவே தெரிகின்றது.

எனவே இந்த அமைச்சுப்பதவியினை பற்றி ஜனாதிபதி அவர்கள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்பதை தாம் வலியுறுத்துவதாகவும் ப.உதயராசா தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like