புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவினை 3கிராம அலுவலர் பிரிவுகளாக பிரியுங்கள்

கிளிநொச்சி, கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள அதிகூடிய சனத்தொகையைக் கொண்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவினை, மூன்று கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்குமாறு, கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள 104 கிராமங்களை உள்ளடக்கிய வகையில் காணப்படும் 16 கிராம அலுவலர் பிரிவுகளிலும், அதிகூடிய சனத்தொகையைக் கொண்ட கிராம அலுவலர் பிரிவாக, புன்னைநீராவி கே.என்-57 கிராம அலுவலர் பிரிவு காணப்படுகின்றது.

இவ்வாறு, அதிக சனத்தொகையைக் கொண்ட பிரதேசமாகக் காணப்படும் புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவினை, மூன்று கிராமஅலுவலர் பிரிவுகளாகப் பிரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, கிராம மட்ட பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள உழவனூர், நாதன் திட்டம், கல்லாறு, புன்னைநீராவி, குமாரசுவாமிபுரம், கண்ணகிநகர் ஆகிய ஆறு கிராமங்களில், சுமார் ஆயிரத்து எண்ணூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

எனவே உழவனூர், கல்லாறு ஆகிய கிராமங்களை ஒரு கிராம அலுவலர் பிரிவாகவும் புன்னைநீராவி, நாதன்திட்டம் ஆகிய கிராமங்களை ஒரு கிராம அலுவலர் பிரிவாகவும், குமாரசுவாமிபுரம், கண்ணகி நகர் ஆகிய கிராமங்களை ஒரு கிராம அலுவலர் பிரிவாகவும் பிரிக்குமாறு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like