சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர் தப்பியோட்டம்: கடமையில் இருந்த பொலிஸார் தற்காலிக பணிநீக்கம்

மன்னாரில் திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரின் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியதால் கடமையில் இருந்த பொலிஸார் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னாரில் இடம் பெற்ற திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட மன்னார் பகுதியில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் அண்மையில் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்பின்பு சந்தேகநபரை பொலிஸார் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்த போது குறித்த குடும்பஸ்தர் திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் 3 பொலிஸாரின் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை சந்தேக நபரின் மனைவி அவரை பார்வையிட வந்த போது பொலிஸார் பார்வையிட அனுமதித்துள்ளனர். இதன்போதே கைவிலங்கிடப்பட்ட நிலையில் சந்தேகநபர் தப்பி சென்றுள்ளார்.

சம்பவம் காரணமாக சந்தேகநபர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற பொழுது விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மூவரும் தற்காலிகமாக பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

தப்பிச் சென்ற நபர் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like