பெற்றோரின் கவனயீனத்தால் ஒன்றரை வயது குழந்தை பலி

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பகுதியில் ஒன்றரை வயது நிரம்பிய பெண் குழந்தை மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கமலதாசன் – சீதையம்மாள் என்போரின் இரண்டாவது புதல்வியான வஸ்மிளா என்பவரே இவ்வாறு தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதேவேளை காயங்களுக்குள்ளான சிறுமி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் போதே உயிரிழந்துள்ளார்.

பிரேதபரிசோதனைகளின் பின் சிறுமியின் சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோரின் கவனயீனமே சிறுமி உயிரிழந்தமைக்கு காரணம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக பெற்றோர்களினதும், பெரியோர்களினதும் கவனயீனத்தால் பல சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் ஊனமுற்றுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக பல தடவைகள் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like