கிளிநொச்சி பாரதிபுரத்தில் கால்நடை வளர்ப்போர் தொடர்பிலான விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பாரதிபுரம் பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (02) இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அதிகளவானோரின் வாழ்வாதாரத் தொழிலாக கால்நடை வளர்ப்பு காணப்படுகின்றது. தற்போது கால்நடை வளர்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

கால்நடைகளுக்கு உரிய மேய்ச்சல் தரைகள் இன்மை மற்றும் கால்நடைகளுக்கு ஏற்படுகின்ற நோய்களுக்கான சிகிச்சை என்பவற்றில், கால்நடை வளர்ப்போர் பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

மேலும் தங்களுடைய மாதாந்த வருமானத்தையும் இழக்கும் நிலையும் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கனகாம்பிக்கைக்குளம், பாரதிபுரம், மலையாளபுரம், மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோரக் கிராமங்களான பொன்னகர், இந்துபுரம், செல்வபுரம், திருமுறிகண்டி, ஆகிய கிராமங்களின் கால்நடை வளர்ப்போருக்கான அமைப்புக்கள் இணைந்து இக்கலந்துரையாடலை ஏற்பாடுசெய்திருந்தன.

இதேவேளை குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச கால்நடைஅபிவிருத்தி உத்தியோகத்தர், ஒட்டுசுட்டான் பிரதேச கால்நடை உத்தியோகத்தர், மேற்படி கிராமங்களைச்சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

You might also like