வவுனியாவில் கர்ப்பிணி பெண் மீது நிதி நிறுவனம் சார்ந்தவர் தாக்குதல் : பெண் வைத்தியசாலையில்

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி இலுப்பையடி சந்திக்கு அருகே நேற்று (30.06.2018) நிதி நிறுவனம் சார்ந்தவர் கர்ப்பிணி பெண் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து கர்ப்பிணிப்பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவில் அமைந்துள்ள பிரபல நிதி நிறுவனத்தில் நபரொருவர் வாகனத்திற்கு லீசிங் பெற்றுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக மாதாந்த லீசிங் பணத்தினை செலுத்தவில்லை. அதனையடுத்து வாகனத்தினை பறிமுதல் செய்வதற்கு அனுமதியினை பெற்று பறிமுதல் செய்வதற்கு நான்கு நபர்கள் சென்றுள்ளனர்.

குறித்த வாகனத்தின் உரிமையாளர் நேற்றையதினம் மாலை வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி இலுப்பையடி சந்திக்கு அருகே வீதியில் வாகனத்தினை தரித்து விட்டு வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்ய சென்றுள்ளார். இதன் போது வாகனத்தினுள் அவரது மனைவியும் (7 மாத கர்ப்பிணி), அவரது உறவினர்களும் (பெண்கள்) இருந்துள்ளனர்.

இதன் போது திடீரென நிதி நிறுவனத்தின் வாகனத்தினை பறிமுதல் செய்யும் ஊழியர் வாகனத்தில் சாரதியின் ஆசனத்தில் ஏறி அமர்ந்துள்ளார். திடீரேன நபரோருவர் வாகனத்தில் ஏறியதினால் பதட்டமடைந்த வாகனத்தின் முன்பக்கத்தில் சாரதி ஆசனத்திற்கு அருகேயிருந்த வாகன உரிமையாரின் மனைவி (7 மாத கர்ப்பிணி) இனந்தெரியாத நபர்களின் அத்துமீறலால் வாகனத்தின் திறப்பினை எடுப்பதற்கு முயன்றுள்ளார்.

இதன் போது கர்ப்பிணிப் பெண் மீது நிதி நிறுவனத்தில் பறிமுதல் செய்யும் ஊழியர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகிய கர்ப்பிணி பெண் சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தின் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராட்சி அவர்களின் பணிப்பின் பேரில் குறித்த நிதி நிறுவனத்தில் வாகனத்தினை பறிமுதல் செய்யும் ஊழியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக வாகனத்தின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில்இ

நான் கடந்த இரண்டு மாதங்கள் கட்டுப்பணம் செலுத்த காலதாமதமாகியமையினால் குறித்த நிதி நிறுவனத்தின் மூலம் வாகனங்களை பறிமுதல் செய்யும் குழுவிற்கு இது தொடர்பாக அறிக்கையிடப்பட்டு இவர்கள் தமது நடவடிக்கைகளை அத்துமீறல்களுடனும், அடாவடித்தனத்தடனும், தீய வார்த்தைப் பிரயோகத்துடனும் குடிபோதையில் மக்கள் மத்தியில் செயற்பட்டனர். இதனால் இச் சம்பவத்தின் போது சம்பவ இடத்தில் வாகன உரிமையாளரின் மனைவி (7 மாத கர்ப்பிணி) தாக்குதலுக்குள்ளானார். அத்துடன் அரச சேவையிவிருந்து ஓய்வு பெற்ற வாகன உரிமையாளரின் உறவினர்களும் (பெண்கள்) பாதிக்கப்பட்டிருந்தனர். இச் சம்வத்தில் வாகன உரிமையாளரின் மனைவியின் 3 1/2 பவுண் தங்க ஆபரணம் தவறியுள்ளது எனினும், நகை தொடர்பாக கவலை இல்லையென்றும் வயிற்றிலுள்ள அவரது குழந்தையே முக்கியம் என்றும் தெரிவித்தார். இதன் பொருட்டு குறித்த பாதகச் செயலுக்கு உரியவர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிதி நிறுவனத்தின் வாகன உரிமையாளர் சம்பவம் நடைபெற்ற அன்று மாலை காசோலை மற்றும் பணம் ஆகியவற்றை செலுத்தியதோடு வாகனத்தை நிதி நிறுவனத்தில் ஒப்படைத்துவிட்டு மீதமுள்ள பணத்தை செலுத்தி விட்டு வாகனத்தை மீளப்பெறுவதாகவும் கூறியுள்ளார்.

அதற்கு நிதி நிறுவன முகாமையாளர் வாகனத்துக்கு எந்த சேதமும் வராது என உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.

இவ்விடயத்தினை விட எனது மனைவி 7 மாத கர்ப்பிணி அவர் மீது நிதி நிறுவனத்தின் வாகனத்தினை பறிமுதல் செய்யும் ஊழியர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். எனது மனைவிக்கு ஏதேனும் நடந்தால் யார் பொறுப்பு கூறுவார். எனவே இவ் விடயத்தில் எனது மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பாக பொலிஸார் நீதியான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமேன தெரிவித்தார்.

குறித்த நிதி நிறுவனத்தின் பறிமுதல் செய்யும் ஊழியர் மீது இவ்வாறான பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like