பிலக்குடியிருப்பில் மீள்குடியேறிய மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவிப்பு

பிலக்குடியிருப்பு கிராமத்தில் கடந்த 01ம் திகதி மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அடிப்படைவசதிகள் எவையும் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக மீள்குடியேறிய மக்களுக்கு தறப்பாள்கள் கூட வழங்கப்படாத நிலையில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

பிலக்குடியிருப்பு மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் இருந்து விமானப்படையினர் வெளியேற்றப் படவேண்டும் எனக்கோரி கடந்த தை மாதம் 31ம் திகதி தொடக்கம் 30 நாட்களாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.

இதன் விளைவாக கடந்த 1ம் திகதி பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து மக்கள் தங்களுடைய நிலத்திற்கு திரும்பி இன்றுடன் 3 நாட்களாக காணிகளை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மீள்குடியேறும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய எந்தவொரு வசதியும் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் மக்கள் தாங்களாக பணத்தை சேர்த்தும் நன்கொடையாளர்களின் பணத்தை சேர்த்தும் பொலித்தீன் விரிப்புக்களை வாங்கி அவற்றில் கூடாரங்களை அமைத்து தங்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இன்றைய தினம் மத்தியம் முல்லைத்தீவில் கனமழை பெய்தபோதும் மக்கள் அந்த கூடாரங்களுக்குள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை இது தொடர்பாக மக்களிடம் கேட்டபோது,

காணி கையளிப்புக்கு வந்த அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர் ஆகியோர் அதன் பின்னர் பிலக்குடியிருப்பு கிராமத்திற்கு வரவில்லை.

கடந்த 8 வருடங்களாக சமூர்த்தி நிவாரணம் கூட வழங்கப்படாத நிலையில் அன்றாடம் கூலி வேலைக்கு சென்றே எமது அன்றாட செலவுகளை பார்த்து வருகின்றோம்.

இதற்கிடையில் 30 நாட்கள் போராட்டம் நடத்தியமையினால் வேலைகளுக்கும் செல்லவில்லை. இவற்றால் காணிக்கு வரும்போது வெறுங்கையோடே வந்தோம்.

பலர் கடன் வாங்கியே காணிகளை துப்புரவு செய்கின்றார்கள். எங்களுடைய நிலத்தில் நின்றிருந்த பயன்தரு மரங்களையும், எங்களுடைய வீடுகளையும் அடியோடு அழித்த இந்த அரசாங்கம் குறைந்தபட்சம் எமக்கு ஒரு தறப்பாளை கூட வழங்கவில்லை.

நாங்கள் கடந்த 2 நாட்களாக மழை பெய்யும்போது மரங்களுக்கு கீழ் ஒதுங்குவதும், பின்னர் வந்து காணிகளை துப்புரவு செய்வதுமாக இருந்து வருகின்றோம் என மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

You might also like